செய்திகள்

இன்று உலக மகளிர் தினம் – உலக போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரிய சக்தியாக திகழும் மகளிரை பெருமைப்படுத்துவோம்

வருடம்தோறும் மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயாக, தாரமாக, அக்கா தங்கையாக, மகளாக, தோழியாக நம் உறவின் அனைத்து நிலையிலும் நிறைந்திருக்கிறார்கள் பெண்கள். எப்போதுமே உடலால் வலிமைமிக்க ஆண்களை விட மனவலிமை நிறைந்த பெண்கள் சிறப்பு மிக்கவர்களே.

1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்சில் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி தான் உலக மகளிர் தினம் அமைய ஒரு வித்தாக அமைந்தது. இதனையடுத்து, உலகெங்கும் பெண்கள் உரிமைக்காக போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்தது. பின்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து முதல் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

மகளிர் தினம் என்ற ஒன்று வருடா வருடம் வருவதும் அந்த நாளில் மட்டும் பெண்கள் பற்றிய பார்வை வார்த்தையளவில் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் வந்து வியாபாரமாவதும், எழுதியவர்களை விளம்பரமாக்குவதுமாய் இருந்துவிட்டு அடுத்த மார்ச் 8 வரை காத்திருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்பகாலத்தில் புருவங்களை நெரித்த பெண்னியம் பற்றிய ஆராய்வும் போராட்டங்களும், மகளிர் பற்றிய மதிபீடு அல்லது கருத்துச் சமர்ப்பிப்பு என்பது பற்றி எழுதுவது கூட ஒருவகையில் இப்போதைய காலகட்டங்களில் ஆண்களின் முகச்சுளிப்பை அதிகமாக்குவதாகிவிட்டது மட்டுமல்லாமல் பெரும்பான்மையான ஆண் வர்க்கத்தினருக்கு எரிச்சலூட்டுவதுமாக அமைந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.உண்மையில் பெண்ணியம் பற்றிய ஆராய்வும் , முனைப்பும் எழுத்தளவில் தான் நிற்கிறது. செயற்படுத்தவோ சாதிக்கவோ முனைவது சொற்பமே. ஏனெனில் பெண்கள் சார்ந்த இந்த போராட்டத்தில் பெண்களே முன்வராத பட்சத்தில் மழுங்கடிக்கப்பட்ட ஒரு செயற்பாடாக மட்டுமே பெண்ணியம் இருக்கும்.

உலகப் படைப்புக்களில் உயர்ந்த படைப்பு பெண்ணே. அனைத்து உயிர்களையும் உண்டாக்குவதும் காப்பாற்றுவதும் உயிர்ப்பிப்பதும் பெண்ணே. “அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் பொருத்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண் அவளே ஆக்கலும் காத்தலுக்கான ஆதித் தொன்மத்தாய் வடிவில் உள்ளாள்.‘சக்தி’ மகத்தான ஆற்றல் படைத்த பெண் தெய்வம் என்று இந்து மத வழிபாடு தெரிவிக்கிறது மனைவியை “மனையறத்தின் வேர்” என்று சேக்கிழார் புகழ்ந்துள்ளார். அதனால்தான் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று வள்ளுவரும் வினவுகிறார் .
பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும் சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்வமாகியது, பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது. பெண்பாற் புலவர்கள் சங்க காலத்திலேயே கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு.

உலகெங்கும் பெண்கள் சம உரிமை கோரி நடாத்தும் போராட்டங்களும் ஏனைய நடவடிக்கைகளும் 21 ம் நூற்றாண்டு வரலாற்று செய்தியாகிவிட்டது. அரசாங்கங்களும் மக்கள் குழுக்களும் ஏனையோரும் பெருமளவில் ஏற்றுக் கொள்ளும் முகமாக பெண் உரிமை போராட்டங்கள் அமைந்துள்ளன.பெண்கள் பத்திரிகை வாயிலாகவும் கருத்தரங்குகள் வாயிலாகவும் தங்கள் கொள்கைகளையும் எண்ணக்கருத்துக்களையும் காலத்திற்கு காலம் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பெண் விடுதலையின் பூரண தாற்பரியத்தையும் அவர்கள் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை.

மதம் கலாசாரம், போன்றவற்றில் இருக்கும் காலத்திற்கொவ்வாத முரண்பட்ட பழமை வாதங்களை நாம் களைந்தெறியப் பின் நிற்கின்றோம் பயப்படுகின்றோம். ஊர்வலங்கள் வேண்டாம் ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை. கூச்சல் கூக்குரல்கள் பயன்படாது ஆனாலும் போலி நியாயங்களையும் பெண்ணை அடிமையாக்கும் கலாசாரப் பண்புகளையும் நாம் மிக ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். பழையன கழிய புதியன புகுத்தப்பட வேண்டும். நாகரீகம் வளர வேண்டும். இந்த ரீதியில் பெண்களைச் சிந்திக்க வேண்டும்.இப் பெண் அடிமைத்தனத்தை இல்லாதொழிக்கும் முகமாக 1979 டிசெம்பர் 18 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் (CEDAW) பல நாடுகள் ஒப்பமிட்டுள்ளன. இவை நடைமுறையில் காணப்படுகின்றனவா என நோக்கும் பேர்து அது கேள்விக்குறியாகவே உள்ளது.(15)