செய்திகள்

இன்று சீனா செல்கிறார் மங்கள: முதலீடுகள் குறித்து முக்கியமாக ஆராய்வார்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவுக்கான பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், உயர்மட்ட அமைச்சர் ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

இன்று சீனா புறப்படும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பீஜிங்கில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து, அந்த நாட்டின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

மங்கள சமரவீரவின் இந்தப் பயணம், இருதரப்பு  உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கும் என இலங்கை கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனா முதலீடு செய்துள்ள திட்டங்களின் எதிர்காலம் குறித்து, இந்தப் பயணத்தின் போது மங்கள சமரவீர முக்கியமாக கலந்துரையாடுவார் என்று தெரிய வருகிறது.

சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பீஜிங்கில் இருந்து ஜெனிவா செல்வாவுள்ளார்.  ஜெனிவாவில் வரும் மார்ச் 2ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அவர் உரையாற்றவுள்ளார்.