இன்று டில்லி பயணமாகிறார் மைத்திரி: மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கின்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை திங்கட்கிழமை அவர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். ஐ.நா. விசாரணை அறிக்கை, அகதிகள் விவகாரம், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல பல விடயங்கள் இதன்போது ஆராயப்படும்.
புதன்கிழமை வரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர் இந்தியப் பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தப் பேச்சுக்களின் போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தால் இலங்கை குறித்து முன்வைக்கப்படவுள்ள மனித உரிமைகள் விசாரணை அறிக்கை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விவகாரம், சம்பூர் அனல் மின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியத் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துரையாடவுள்ளார்.
மேலும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கும் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்குமான பேச்சுகளும் இந்தச் சந்திப்பில் முன்னெடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் இந்தியா செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரம் குறித்தும் ஆராயப்படும்.
புதுடில்லி விஜயத்தை முடித்துக்கொண்டு புத்தகாயா செல்லும் ஜனாதிபதி பின்னர் திருப்பதி சென்று அங்கிருந்து கொழும்பு திரும்புவார்.