செய்திகள்

இன்றைய முழுமையான சந்திர கிரகணத்தை சென்னையில் ஆர்வத்துடன் கண்டு களித்த பொதுமக்கள்

சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கும் வேளையில் அந்த நிகழ்வு முழு சந்திர கிரகணம் எனப்படுகின்றது. இத்தகைய முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது.

சந்திரனின் நுனிப்பகுதியை பூமி மறைக்கும் நிகழ்வு இன்று மாலை 3 மணி 47 நிமிடங்களுக்கு தொடங்கியது. எனினும், அவ்வேளையில் சூரியன் மேற்கே மறைந்து, கிழக்கே சந்திரன் உதிக்காத நிலையில் மாலை 5.30 மணியளவில் சந்திரனை முழுமையாக கிரகணம் (பூமியின் நிழல்) மறைத்த பின்னர், 5 மணி 32 நிமிடங்களில் இருந்து கிரகணம் மெல்ல, மெல்ல விலகும் காட்சி மட்டும் இந்தியா முழுவதும் காணப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை மாலை 6.30 மணிவரை கீழ்திசை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திரனை கிரகணம் பற்றும் காட்சியை பார்க்க முடியவில்லை. எனினும், அதன் பின்னர் மேற்கு திசையில் சூரியன் மறைந்த பின்னர், கிரகணம் விலகும் காட்சியை மட்டுமே மக்களால் தெளிவாக காண முடிந்தது.

சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் பிர்லா கோளரங்கில் திரண்ட பொதுமக்கள் சந்திர கிரகணத்தை ஆர்வத்துடன் பார்த்தனர். இரவு சுமார் 8 மணியளவில் இந்த கிரகணம் முழுமையாக விலகும் காட்சியை காணலாம்.