செய்திகள்

இன நெருக்கடிக்கு ஐ.நா. ஒத்துழைப்புடன் நிரந்தரத் தீர்வு: நம்பிக்கை வெளியிடுகிறார் ரணில்

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் ஐ.நா.வின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளுடனும் இது தொடர்பில் விரிவாகப் பேசப்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படுமென ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மாவனல்லை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது;ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்க எதிர்ப்பு செய்து கொண்டிருக்கிறது. அரசியல் எமது நாட்டுக்கு உகந்ததொன்றல்ல. எதிர்ப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இரு பிரதான கட்சிகளும் ஒன்றுபட்டுச் செயற்பட்டுவருகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிப் படி தேசிய அரசாங்கத்தை அமைத்துவிட்டோம். இந்த தேசிய அரசு 100 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல . 100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலுக்குச் செல்வோம். தேர்தல் முடிந்த பின்னர் மக்களின் ஆணையுடன் மீண்டும் தேசிய அரசாங்கத்தையே அமைப்போம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு இடத்திலேனும் அடுத்த அரசு சுதந்திரக் கட்சி அரசு என்று கூறவில்லை. நான் ஐ.தே.க.வை வழிநடத்துகிறேன். அவர் சுதந்திரக் கட்சியை வழிநடத்துகிறார். பொதுத்தேர்தலுக்குப் பின்னர் இப்போது போன்றே நாம் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்போம்.

ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் நாம் புதிய பயணமொன்றை ஆரம்பித்துள்ளோம். அதுதான் இணக்க அரசியல் பாதையாகும். கடந்த காலத்தில் எதிர்ப்பு அரசியல் நடத்தியதன் காரணமாக நாடு பாரிய பின்னடைவையே சந்தித்துள்ளது. இதனை அவ்வாறே தொடர முடியாது.

எமது நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்ட ஒரு தலைவராக நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பார்க்கின்றேன். புகழ்ச்சிகளுக்கு மயங்கும் ஒரு தலைவராக அவர் காணப்படவில்லை. தன்னை அவர் மக்கள் சேவகனாகவே நினைக்கின்றார். அரசியல் செய்யும் நாமெல்லோரும் மக்கள் சேவகர்கள் தான். யாரும் உயர்ந்தவருமல்ல, தாழ்ந்தவருமல்ல. அதனால்தான் தன்னை மேதகு, அதி உத்தம என்று புகழாரம் சூட்டி அழைக்க வேண்டாமென வலியுறுத்தி இருக்கின்றார்.

100 நாட்களில் 14 நாட்கள் முடிந்துவிட்டன. பல திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். மீதமுள்ள நாட்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இரவு, பகல் பாராது செயற்படுவோம் .அத்துடன் எமது பணி முடிந்துவிடப் போவதில்லை. நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டும். ஏப்ரலுக்குப் பின்னர் நடக்கும் தேர்தலில் நாங்கள் பிரிந்து நின்று போட்டியிடுவோம். அந்தத் தேர்தலிலும் மக்கள் வெற்றிபெறவேண்டும். மக்களை எமது பக்கம் அணி திரட்டவேண்டும். முடிந்தளவு ஐக்கிய தேசியக் கட்சி கூடுதல் ஆசனங்களை வென்றெடுக்க பாடுபடவேண்டும். அதற்குரிய வேலைத்திட்டத்தை பெப்ரவரியில் 15 ஆம் திகதி அறிவிக்கவிருக்கின்றோம்.

தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் நாம் ஒன்றுபட்டு தேசிய அரசாங்கத்தை அமைத்து நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல உறுதி பூண்டிருக்கின்றோம். புதியதொரு பரம்பரை நாட்டை ஆளும் நிலையை உருவாக்குவதே எமது இலட்சியமாகும். அதற்கு முன்னர் நாம் நெருக்கடிகள், பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டும். நாட்டில் ஒருசாரார் பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டிருப்பதை தொடரவிட முடியாது.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஹெல உறுமய உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் மனம் திறந்து பேசுவோம். அதேபோன்று இதற்காக ஐ.நா. வின் ஒத்துழைப்பையும் எமது அரசு பெற்றுக்கொள்ளும். இந்த நம்பிக்கையுடன் எமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மக்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம் எனவும் பிரதமர் தனதுரையில் தெரிவித்தார்.