செய்திகள்

இன, மத, குல, மொழி பேதங்களால் தான் விசம் கலந்த சமூகமொன்று உருவாகியிருக்கின்றது.

இந்த நாட்டில் இன்னொரு இனமோதலுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது எனவும், உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக தமிழனத்துடன் இணைந்து குரலெழுப்புவதற்கு தயாரகவுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கொழும்பு கம்பன் விழா 2016 இன் இரண்டாம் நாள் மாலை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘தாய்மார்களில் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் வேறுபாடுகளுடன் பிறப்பதில்லை. அனைத்து இனங்களுக்கும் இது பொதுவானதாகவே காணப்படுகின்றன. ஆனால் அதன் பின்னர் இன, மத, குல, மொழி பேதங்களால் அவர்கள் நிரப்படுகின்றார்கள். இதானால் தான் விசம் கலந்த சமூகமொன்று உருவாகியிருக்கின்றது.

இந்த சமுகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பணியில் இலக்கியங்களின் வகிபாகம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. வெற்றிலை செப்பிற்கு இடிவிழுந்த பிறகு என்ன தேடுவதென்ற பழமொழியொன்று உள்ளது. ஒரு சமூகம் முழுமையாக சீர்குலைந்திருக்கையில் இலக்கியம் கட்டியெழுப்படவேண்டுமென எதிர்பார்க்கமுடியாது. அவ்வாறு எதிர்பார்க்கவும் முடியாது.

தற்போது தாய் பிள்ளை உறவு, ஆசிரிய மாணவ உறவு, சகோதரங்களுக்கிடையிலான உறவு உட்பட மனிதனுக்கும் மனிதனுக்குமிடையிலான தொடர்பு கூட துண்டுதுண்டுகளாக சீர்குலைந்திருக்கின்றது. குறிப்பாக தாய்மார் தமது பிள்ளைகளை முதலைகள் உண்பதற்காக கங்கையில் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. தந்தைமார் பிள்ளைகளை பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறான அனர்த்தத்தை எதிர்கொண்டிருப்பது தமிழ் சமுகம் மட்டுமல்ல. சிங்கள சமுகம் மட்டுமல்ல. அனைத்து சமுகங்களுமே எதிர்கொண்டுள்ளன. வடக்கில் வித்தியாவுக்கு அகோரம் நிகழ்ந்ததைப்போன்றே கம்பஹாவில் சேயாவுக்கு நிகழ்ந்தது. மட்டக்களப்பில் றிசானாவுக்கு நிகழ்ந்தது. இவ்வாறான அனர்த்தத்திற்கு அனைத்து சமுகமுமே முகங்கொடுக்கின்றது.

எமது சமுங்கள் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தத்திற்கு எதிர்கொள்ளாதிருப்பதை உறுதிசெய்யவேண்டியது. இந்த யுகத்தில் வாழும் எமது கடமையாகும். நாடகங்கள், சினிமா, கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் என எம்மத்தியில் பல இலக்கிய ஊடகங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை மக்களை வளப்படுத்துவதாக அமைக்கின்றனவா என்ற ஐயம் காணப்படுகின்றது.

இலக்கியங்களால் வெற்று மனிதர்களாக இருக்கின்றவர்கள் மத்தியில் அறிவை அபிமானத்தை வளர்க்கவில்லை. ஒர் இடத்திற்குச் சென்று நிமிர்ந்து நின்று பேசமுடியாத சமுதாயமாக மாறும் நிலையே உள்ளது.

ஜனாதிபதியை பிரதமர் வணங்குகின்றார். பிரதமரை அமைச்சர்கள் வணங்குகிறார்கள். அமைச்சர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களை மாகாண சபை உறுப்பினர்களும், அவர்களை பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேச சபை உறுப்பினர்களை மக்களும் வணங்குகின்ற நிலைமையே உள்ளது. வளைந்து கொடுகின்ற சமுகத்திலிருந்து நாம் மீளவேண்டியவர்களாக உள்ளோம்.

அனைவரும் தமது பணியை சரியாகச் செய்யவேண்டும். நீண்ட தூரத்திலிருந்த சாதாரண விவசாயி பிரதேச செயலகத்திற்கு சென்று தனது தேவையை நிறைவேற்ற முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அனைத்து பிரஜைகளுக்கும் கௌரவம் இருக்கின்றது. அவ்வாறான சமுக அமைப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டும். இதில் இலக்கியவாதிகளுக்கு பெரும்பங்கு இருக்கின்றது’ எனவும் தெரிவித்துள்ளார்.

N5