செய்திகள்

இப்போதைக்கு நாட்டுக்கு வரவேண்டாம்: அரியநேத்திரன் வெளிநாட்டு தமிழர்களுக்கு அறிவுறுத்து

பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சவூதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்த மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளை தந்தையான ரகுபதி கனகசூரியம் என்பவர் விடுமுறையில் நாடு திரும்பிய போது கடந்த 22 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட ரகுபதி தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதற்கு முன்னர் விடுமுறையில் நாடு திரும்பி மீண்டும் எந்த வித இடையூறும் இன்றி ரகுபதி சவூதி அரேபியாவுக்கு திரும்பிச் சென்றிருந்ததாகவும் முதல் முறையாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நல்லாட்சி நடக்குமாயின் எப்படி தமிழ் மக்கள் இவ்வாறு கைது செய்யப்படலாம் என அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளோர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் முன்னாள் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தில் நாடு திரும்புவதை தவிர்க்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் முடிவில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 15 தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடு சென்று தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு திரும்பியவர்களும் இதில் அடங்குகின்றனர்.

குவைத், ஓமான், சவூதி அரேபியா, இத்தாலி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நாடு திரும்பிய பலர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் எதிர்வுரும் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.