செய்திகள்

இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் சீமானுக்காக பிரசாரம்?

இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் தன்னை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இன்று பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எறும்புகளை விட சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்கள். மக்களை கூட்டி தாங்கள் பேசவில்லை. நாங்கள் பேசும் இடங்களுக்கு மக்கள் வருகிறார்கள்.

மக்களிடம் மாற்றத்திற்கான தேடல் உள்ளது. தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண்டும். சில இடங்களில் காவல் துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

மது ஒழிப்பை அ.தி.மு.க – தி.மு.க. வும் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். 2011–ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் ஜெயலலிதா தற்போது தான் மது விலக்கு குறித்து பேசுகிறார்.

சசிபெருமாளின் இறப்பை அடுத்து நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதை அடுத்து தி.மு.க.வும் இது குறித்து பேசுகிறது.

அதுபோல மது, ஊழல், லஞ்சம் ஒழிப்பு குறித்து பேசுவதே தற்போது நாகரிகமாக கருதப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகளால் இவற்றை ஒழிக்க முடியாது.

கச்சத்தீவை மீட்போம், ஈழ பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு எடுத்து சென்று அழுத்தம் கொடுப்போம் என்று கூறிவரும் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

வேல்முருகன், சேதுராமன், ஜான்பாண்டியன் ஆகியோர் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைப்பதில் ஏமாற்றம் அடைந்தது வருத்தமாக உள்ளது. எங்களை வேல்முருகன் ஆதரித்தால் வரவேற்போம். தேர்தல் முடிவு புரட்சிகரமாக அமையும்.

விருத்தாசலத்தில் நடந்த அ.தி.மு.க பிரசாரக் கூட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இது பற்றி தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தேர்தல் அறிக்கை என்பதே வெற்று அறிக்கை. நாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. செயல்பாட்டு வரைவு அறிக்கை தான் வெளியிட்டுள்ளோம்.

கடலூரில் என்னை ஆதரித்து திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, செல்வமணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.