செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்புகிறதா இத்தாலி?

இத்தாலியில் இந்த மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படலாம் என அந்நாட்டின் பிரதமர் குசெப் கொன்டே தெரிவித்துள்ளார்.அங்கு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் ஊடகங்களுக்கு அவர் அளித்த முதல் பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.விஞ்ஞானிகள் உறுதி செய்தால், இந்த மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்குவோம். அந்த நடவடிக்கை படிப்படியாக எடுக்கப்படும்” என்றும் பிபிசியிடம் பேசிய அவர் கூறினார்.

இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் வீதம் மெதுவாக குறைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரிக்க தற்போது அது ஒரு சதவீதமாக உள்ளது.அதேபோல இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் 919இல் இருந்த பலி எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் 542ஆக குறைந்துள்ளது.

எனினும் எச்சரிக்கையாக இருக்கப்போவதாகவும், கட்டுப்பாடுகளை படிப்படியாகவே குறைக்க உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதால், தீவிர சிகிச்சை பிரிவின் மீது இருக்கும் அழுத்தமும் குறைகிறது. இதுவரை அங்கு குறைந்தது 100 மருத்துவர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.(15)