செய்திகள்

இரட்டை வாக்குச்சீட்டு முறை இல்லாவிடில் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்: மக்கள் காங்கிரஸ்

புதிய தேர்தல் சீர்திருத்தில் இரட்டை வாக்குச் சீட்டு முறைமை உள்ளடக்கப்பட வேண்டுமெனசும் இல்லையேல் உயர்நீதிமன்றத்தை சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் நாடுமேனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தேர்தல் சீர்திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டமை குறித்து அவரிடம் கேட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :

சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய தேர்தல் சீர்திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கண்டிக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரபால சிறிசேனவுக்கு சிறுபான்மையினர் வாக்களித்தமை சிறுபான்மையினரின் உரிமையை பறிப்பதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி, தேர்தல் சீர்திருத்தத்தை முன்னெடுத்து வருகின்றமையினாலேயே இக்கேள்வி எழுகின்றது. இந்நிலையில் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு சிறுபான்மை, சிறுகட்சிகள் தீர்மானித்துள்ளன. அரசியலமைப்பின் 3ஆம் சரத்தின் பிரகாரம் தேர்தல் சீர்திருத்தமொன்றை சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் கொண்டுவரமுடியாது.

புதிய சீர்திருத்தத்தில் இரட்டை வாக்குரிமை உள்ளடக்கப்படாத வரையில் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் எதிர்த்துக்கொண்டேயிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.