செய்திகள்

இரணைதீவுக்குள் சடலங்களை அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் உறுதி – தொடரும் பதற்ற நிலை

இரணைதீவுக்குள் சடலங்களை அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் உறுதியாகக் கூறியுள்ளனர். தங்களை மீறி அடக்கம் செய்ய முற்பட்டால் அது பெரும் கலவரத்தில் முடியும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.இதேவேளை, சடலங்களைப் புதைக்க ஏதுவாக அங்கு கடற்படையினரால் குழிகள் தோண்டப்பட்டு தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அந்தக் குழிகளை மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர்.இந்நிலையில் தமது எதிர்ப்பை மீறி சடலங்களை எடுத்துவந்தால் அதனை உள்ளே அனுமதிக்காது முழு மூச்சாக எதிர்ப்போம் எனக் கூறி நேற்று முழு நாளும் அங்கு சுமார் 300-க்கு மேற்பட்டோர் திரண்டிருந்தனர். நேற்றிரவும் அவர்கள் அங்கேயே கூடியிருந்தனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் உடல்கள் மக்களின் எதிர்ப்பை மீறி அடக்கம் செய்வதற்காக இரணைதீவுக்கு நேற்று கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அங்கு நேற்று பெருமளவானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் நிலைப்பாட்டிலிருந்து அரசு மாறாத நிலையில் அடக்கத்துக்கு அனுமதிக்கப்போவதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் உள்ளதால் தொடர்ந்து இரணைதீவில் பதற்ற நிலை தொடர்ந்துவருகிறது.

இதேவேளை இரணைதீவில் முஸ்லிம் மக்களின் உடலங்களை புதைப்பது தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் முடிவு கிடைக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து பிரதமர், ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றேன். சுகாதார அமைச்சரும் நான் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் கதைத்தது தொடர்பாக என்னிடம் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இதன்போது அந்த இடம் புதைப்பதற்கு பொருத்தமானதாக இல்லை என்ற முடிவை அவரிடம் கூறினேன்.அங்கு இலங்கைக்கு வருவாய் கிடைக்க கூடிய வகையில், ஒரு வருடத்திற்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானத்திற்கான ஒரு திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.அதைவிட இன்னும் பல திட்டங்கள் அங்கு செய்யப்பட இருக்கின்றன. ஆகையினால் இத்திட்டத்தை மாற்றியமைக்குமாறும், வேறு சில தீவுகளை இதற்காக அடையாளப்படுத்தியும் இருக்கின்றேன்.இதற்கான தீர்வு இன்றோ நாளையோ அல்லது வருகின்ற திங்கட்கிழமையோ அமைச்சரவையிலிருந்து கிடைக்கும் என தெரிவித்தார்.(15)