செய்திகள்

இரண்டாவது ஜப்பானியரின் தலையையும் துண்டித்த ஐ.எஸ்

பணயக் கைதியாக வைத்திருந்த இரண்டாவது ஜப்பானியர் கென்ஜி கோட்டோவில் தலையை ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்தனர். இது முழுக்க முழுக்க குரூரமானது என்றும், மன்னிக்க முடியாத தீவிரவாத செயல் என்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவின் குறிப்பிட்ட பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறி வந்த அவர்களை பன்னாட்டு ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் அவர்களின் முகாம்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடந்த சில மாதங்களாக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதற்கு பழிவாங்கும் வகையில் தங்கள் பிடியில் உள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பணயக்கைதிகளின் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளனர்.

இதனிடையே, ஐப்பானைச் சேர்ந்த கென்ஜி கோட்டோ ஜோகோ, ஹருனா யுகாவா ஆகிய இரண்டு பிணைக் கைதிகளைக் கொல்வோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது. இதில் கென்ஜி கோட்டோ ஜோகோ பத்திரிகை நிருபர். ஹருணா யுகாவா சிரியாவுக்கு சுற்றுலா சென்றவர். இருவரையும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இவர்களில் ஹருணா யுகாவாவை கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றனர். பின்னர், ஜோர்தான் நாட்டு சிறையில் இருக்கும் தங்கள் சகோதரி சாஜிதா அல் ரிஷவாய் என்பவரை விடுவித்தால் இன்னொரு ஜப்பானியரான கென்ஜி கோட்டோ விடுவிக்கப்படுவார் என்று தீவிரவாதிகள் நிபந்தனை விதித்து காலக் கெடுவும் விதித்தனர்.

அந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், அவரைக் கொலை செய்து அதுதொடர்பான வீடியோ பதிவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். தங்கள் நாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை.

கைதிகள் பரிமாற்றம் குறித்து நல்லதொரு முடிவை ஜப்பானும் ஜோர்தானும் தேர்வு செய்ய வேண்டும் என்று ஜப்பான் பிணைக் கைதியின் குடும்பம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.