செய்திகள்

இராணுவத்தினருக்கு தேர்தல் ஆணையாளர் கடும் எச்சரிக்கை

வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதை இராணுவத்தினர் எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் இராணுவத்தினால் கூட நீங்கள் வாக்களி;ப்பதை தடுக்க முடியாது,அவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்கா உங்களை வாக்களிக்கவேண்டாமென தடுத்தால் அதனை நிராகரிக்கும் உரிமை உங்களுக்குள்ளது என மக்களுக்கு அறிவுறுத்தலொன்றை வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு உட்பட நாட்டின் சில பாகங்களில் வாக்களிப்பில் இராணுவம் தலையிடலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே தேர்தல் ஆணையாளரின் இந்த கருத்துவெளியாகியுள்ளது.
கள்ளவாக்கு போடப்படுவதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன, மக்கள் இது குறித்து அச்சமடையத்தேவையில்லை,மக்களை தவறாக வழிநடத்துவதற்காக சில குழுக்கள் தவறான முடிவுகளை வெளியிட முயல்வதாக அறிகின்றோம்,தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்படுபவை மாத்திரமே உண்;மையான முடிவுகள்,வாக்குகள் எண்ணப்படுவது நேர்மையாக இடம்பெறுவதை உறுதிசெய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு முடிவடைந்து 3 மணித்தியாலங்களின் பின்னர் வாக்குகள் எண்ணப்படுவது ஆரம்பமாகும்,என அவர் குறிப்பிட்டுள்ளார்.