செய்திகள்

இராணுவத்தினர் விடுவித்த 1043 ஏக்கரில் 20 வீதமே மக்கள் குடியிருந்த பகுதிகள்

வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்து மீள்குடியேற்றத்திற்கென விடுவிக்கப்பட்ட 1043 ஏக்கரில் 20 வீதமான காணிகளே மக்களுடைய குடியேற்றக் காணிகள் என்று தெரிவித்துள்ள வலி.வடக்குப் பிரதேச சபையின் தலைவர் எஸ்.சுகிர்தன், மக்கள் குடியிருப்புகளை குறிவைத்தே இராணுவத்தினர் முகாம்களை அமைத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த 613 ஏக்கர் காணி நேற்று இரண்டாம் கட்டமாக மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது. ஆனாலும் அங்கு சென்ற மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“புதிய அரசாங்கம் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து 1000 ஏக்கர் நிலப்பரப்பினை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதாக தெரிவித்திருந்தது. இதன்படி முதற்கட்டமாக வளலாய், வசாவிளான், பலாலி தெற்கில் 430 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 613 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவை விவசாய நிலங்களே.

மக்களுடைய குடிமனைகள் என்று பார்க்கும் போது விடுவிக்கப்பட்ட பகுதிகளின் 20 வீதமானவையே குடியிருப்புக் காணிகள் என்று கூறலாம். மக்கள் குடியிருப்புக் காணிகளை குறிவைத்தே இராணுவத்தினர் முகாம்களை அமைத்துள்ளனர். இதனால் அவ்விடங்களை விடுவிக்கவும் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இராணுவம் முகாம்கள் அமைத்துள்ள காணிகளை விடுவித்தால் யாழ்ப்பாணத்தில் உள்ள சில நலன்புரி நிலையங்களை மூடிவிடலாம்.  1000 இற்கும் மேற்பட்ட பகுதிகள் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த போதும் யாழ்ப்பாணத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அவர்கள் இன்றும் நிலங்களை பறிகொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

04

03

02

02

1