செய்திகள்

இராணுவத்தின் பிடியில் பாலகுமாரன்: புதிய போர்க்குற்ற புகைப்படம்

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் க.வே.பாலகுமாரனும், அவரது மகனும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் புதிய போர்க்குற்ற ஆதாரப்புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான பாலகுமாரன் தொடர்பான புகைப்படத்தில், அவர் வடலிப்பற்றை சூழ்ந்த இடத்தில் மரத்தில் செய்யப்பட்ட இருக்கையில் உட்கார்ந்திருந்தார். இந்த புகைப்படத்தில் தரையில் உள்ள சிறிய பலகை போன்ற ஒன்றில் உட்கார்ந்திருக்கிறார். அவரை இராணுவத்தினர் விசாரணை செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான புகைப்படத்தில் பாலகுமாரனின் முகத்தில் பெரும் கலவரம் தெரிந்தது. இந்த புகைப்படத்தில் அவர் ஓரளவு இயல்பான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதனால், கைது செய்யப்பட்டு நீண்டநேரத்தில் பின்னர் இந்தபடம் பிடிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

இந்த படத்தில் பாலகுமாரன் மற்றும் அவரது மகன் தவிர்ந்த இன்னொருவரும் உட்கார்ந்திருக்கிறார். பாலகுமாரனை தாம் கைது செய்யவில்லையென படைத்தரப்பும், இராணுவமும் திரும்பத்திரும்ப கூறிவரும் நிலையில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் மைத்திரி அரசை நிச்சயம் நெருக்கடியில் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.