செய்திகள்

இராணுவம் கைப்பற்றிய காணிகளை மீள வழங்க நடவடிக்கை: விக்கினேஸ்வரனிடம் ரணில் உறுதி

வடக்கு மாகாணத்தில் இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடமே மீள வழங்கப்படும். இது தொடர்பில் ஆராய்வதற்காக விரைவில் விஷேட குழு ஒன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்திருக்கின்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வடமாகாண முதலமைச்சர் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் சந்தித்துப் பேசிய போதே ரணில் விக்கிரமசிங்க இந்த உறுதிமொழியை வழங்கியிருக்கின்றார்.

இச்சந்திப்பில் பல விடயங்கள் தொடர்பாகப் பேசப்பட்டதாகத் தெரிவித்த முதலமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“வடக்கில் இராணுவத் தேவைக்காக பெருமளவு காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நான் கேட்டிருந்தேன். ஆனால், காணிகளை விடுவித்தால் எதிர்க்கட்சிகள் இனரீதியாக போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள் என ரணில் விக்கிரமசிங்க அஞ்சுகின்றார். இருந்தபோதிலும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு விஷேட குழு ஒன்றை அமைப்பதற்கு தான் தயாராகவிருப்பதாக அவர் தெரிவித்த்தார்.

இந்தக்குழுவில் காணிகளை இழந்த மக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், வடமாகாண இராணுவத் தளபதிகள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பினரும் இடம்பெறுவார்கள். தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்தக்குழுவின் சிபார்சின் அடிப்படையில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரணில் தெரிவித்தார்.

இதேபோல அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேனன். இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, அனைத்துக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க முடியாதிருக்கும் எனத் தெரிவித்தார். இருந்தபோதிலும் 2002 சமாதான உடன்படிக்கையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் செயற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

இதனைவிட வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு தற்போது காணப்படும் இடையூறுகள், நெருக்கடிகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனைவிட வடமாகாண இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.”

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.