செய்திகள்

இராணுவம் தமிழருக்கு எதிராக யுத்தம் செய்யவில்லையாம் : மஹிந்த கூறுகின்றார்

இராணுவத்தினர்  தமிழர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு இனத்திற்கு எதிராகவோ யுத்தம் செய்யவில்லை எனவும் அவர்கள் விடுதலைப் புலி இயக்கத்துக்கு எதிராக மாத்திரமே யுத்தம் செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்  இராணுவம் தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் செய்ததாக காட்டுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஹோமாகம பிரதேசத்தில் விகாரையொன்றில் நடைபெற்ற  வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு இனத்திற்கு எதிராகவோ இலங்கை இராணுவம் யுத்தம் செய்யவில்லை. அமெரிக்கா உட்பட உலக நாடுகளலால்  பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகவே  யுத்தம் செய்தனர்.
இரண்டாக பிளவுற்றுக் காணப்பட்ட  நாட்டை  ஒன்றுசேர்க்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதுடன் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கும் அளவிற்கும் சென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.