செய்திகள்

இராணுவ நடவடிக்கை காரணமாக ஈராக்கில் பெருமளவு மக்கள் இடம்பெயர்வு

திக்கிரித் நகரை ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்பதற்காக ஈராக்கிய இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
சுமார் 30.000 ற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நாடுகள் அறிவித்துள்ளது.இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் சமாரா நகரை நோக்கிசெல்வதாகவும், பல குடும்பங்கள் வழியிலுள்ள சோதனைசாவடிகளில் சிக்குண்டுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரணபொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனத்தொடரணிகள் சென்றுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
திக்கரித் நகரை மீள கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் 30000 ஈராக்கிய துருப்பினரும்,ஈரான் ஆதரவு குழுக்களும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர்கள் திக்கிரித்தில் உள்ள தீவிரவாதிகளை சுற்றி வளைக்க முயன்றுள்ளனர். எனினும் நிலகண்ணிவெடிகள் காரணமாக இவர்களது முன்னேற்றம் தாமதமாகின்றது.
இந்த நடவடிக்கையில் அமெரிக்க தாக்குதல் விமானங்கள் ஈடுபடாததும் முக்கியமானது.
இதேவேளை விமானங்கள் தங்கள் இலக்குகளை குறிவைப்பதை தடுப்பதற்காக ஐஎஸ் தீவிரவாதிகள் எண்ணெய் கிணறுகளுக்கு தீமூட்டியுள்ளனர்.எனினும் இது தங்களது இராணுவநடவடிக்கையை பாதிக்காது என ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.