செய்திகள்

இராணுவ பிரசன்னம் குறையும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தை நாடு முழுவதும் நிலைகொள்ளச்செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதன் மூலமாக தனது ஆட்சியில் இராணுவமயப்படுத்தலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளார் என ஏஎப்பி செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
சிறிசேனவின் வெற்றி வடகிழக்கு உட்பட பல பிரதேசங்களில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இவ்வாறான அதிகரித்த இராணுவ பிரசன்னம் ராஜபக்ச அரசாங்கத்தில் விசேடமான விடயமாக காணப்பட்டது.
தேர்தல் பிரச்சாரங்களின் போது சிறிசேன இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவதாகவும் அவசியமான சூழ்நிலைகளில் மாத்திரம் பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது இராணுவத்தை நிலைகொள்ளச்செய்வதற்காக மாதாந்தம் பிறப்பிக்கப்படும் ஆணையை அவர் புதிப்பித்துள்ளார்.விசெட வர்த்தமானி அறிவித்தலில்இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமளவு இராணுவ பிரசன்னம் என்பது வடகிழக்கிற்கு சீற்றத்தை ஏற்படுத்தும் விடயம்,
யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் இராணுவத்தை நிலைகொள்ளச்செய்வதற்கான அவசியம் என்ன என்பதை ஜனாதிபதி தெளிவு படுத்தவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ்பிரமேசந்திரன் குறிப்பிட்டார்.
நான் இவ்வாறான அறிவிப்பிற்கான தேவையில்லை என உறுதியாக கருதுகிறேன்,
அவர் இந்த நிலையை மாற்றுவதாக உறுதியளித்தார் ஆனால் முன்னைய அரசாங்கம் செய்ததை அவர் செய்யமுனைந்தால் நாங்கள் மீண்டும் பழைய சூழ்நிலைக்கே தள்ளப்படுகிறோம் என்பதே அதன் அர்த்தம் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி படையினரை முகாம்களுக்குள் முடக்குவார் என எதிர்பார்த்தோம் என குறிப்பிட்டுள்ள சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில்ஜெயசேகர இது நிச்சயமாக ஓரு பின்னோக்கிய நடவடிக்கை என தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.