செய்திகள்

இராணுவ மயமாகும் மீரியபெத்த

மீரியபெத்த மண்சரிவு மீண்டும் ஒரு சுனாமியை இலங்கையின் மலையகப் பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. அலை அலையாய் மக்கள் திரண்டு வருவதையும், நாடு முழுவதும் மக்கள் உதவிக் கரம் நீட்டுவதையும் காணும்போது மனித நேயம் சாகவில்லை என்ற நம்பிக்கை நமக்கு புத்துணர்வைத் தருகின்றது. அதேவேளையில், இந்தப் பகுதி இராணுவ மயமாவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

நாங்கள் இவ்விடத்திற்கு சென்றிருந்தபோது ஒரு சில அமைச்சர்களும் வந்திருந்தனர். இப்போது எதைப் பார்க்க வருகிறார்கள் இவர்களுக்கு ஓட்டுப்போட்டு நாய் படாத பாடு என்று இளைஞர்களும் பெண்களும் வாய்விட்டுக் கூறியதைக் கேட்டோம். அத்தனை வெறுப்பு அவர்கள் மனதில்.

மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் இந்தப் பக்கமாக 4 இராணுவத்தினர் தொலைபேசியில் கதைத்துக்கொண்டும் ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டும் இந்தப் பெண்ணை கண்டிருக்கிறீர்களா என்றும் அவ்விடத்திற்கு வரும் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்த பக்கத்தில் ஒரேயொரு பெக்கோ இயந்திரத்துடன் சுமார் 25 இராணுவத்தினர் நின்றிருந்தனர். மீட்புப் பணியில் இவர்களின் பங்களிப்பு சரியாக கிடைக்கவில்லை என்பது அங்கிருந்த பல தொழிலாளரின் கருத்தாக இருந்தது.
SRI LANKA-DISASTER-LANDSLIDE
ஏனைய தோட்டப்பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர் மண் சரிவுடனேயே ஓடிவந்து தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மக்களை மீட்கப் போராடியுள்ளார்கள். இதன்பின் வந்த இராணுவம் மண் சரிவு மீண்டும் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக கூறி மெதுவாகவே இப்பணியில் ஈடுபட்டதாக அவர்கள் ஆதங்கப் படுகிறார்கள். தக்க விதத்தில் முயன்றிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது அவர்கள் கருத்து. தோட்ட நிருவாகமும் முடிந்தளவு உதவியுள்ளது.

அன்று பூனாகலை பாடசாலையில் சில காவல் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். ஓரு காவல் அதிகாரி இவர்களுக்கு சிங்களம் தெரியவில்லை எங்களுக்கு தமிழ்த் தெரியவில்லை பெரிய தொல்லையாகப் போய்விட்டது என்று அலுத்துக் கொள்வதும் எங்கள் காதில் விழுந்தது. அனைத்து அறிவிப்புகளும் சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப் படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று நாம் அங்கு சென்றபோது அந்த மக்கள் அனைவரும் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
20
சமையலும் அவர்களே. கேட் காவலும் அவர்களே. பார்க்க வருபவர்களை உள்ளே விட மறுக்கிறார்கள். ஏற்கனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இந்த செயற்பாட்டினால் மேலும் பலவீனப்படுத்தப் படுகிறார்கள். தங்களை காண வருபவர்கள் மூலமாகத்தான் அவர்கள் ஆறுதல் பெறுகிறார்கள். இதை இராணுவம் புரிந்துக் கொள்ளாமல் இருப்பது நமக்கு கவலையைத் தருகிறது.

உணவு வழங்கப்படும் நேரங்கள் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ளது. தேநீர் அருந்துவதற்கு பக்கத்தில் உள்ள தேநீர் கடைக்கு இவர்கள் செல்வதாக கடைக்காரர் கூறுகின்றார். இந்த மக்களின் உணவுப் பழக்கத்திற்கு உகந்த சமையலை இராணுவத்தால் வழங்கமுடியுமா என்பதும் ஒரு கேள்விக்குறி. இந்தப் பொறுப்பை தோட்ட மக்களிடமே கொடுத்திருக்கலாம். தோட்ட இளைஞர்கள் இந்தப் பராமரிப்பு வேலைகளை திறம்படச் செய்வார்கள். ஏன் இராணுவம் பொறுப்பேற்க வேண்டும்?
18
மூன்று விதமாக பாதிக்கப்பட்ட மக்கள் மூன்று பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

* பூனாகலை இல.1 தமிழ் மகா வித்தியாலயம்

* கொஸ்லாந்தை தமிழ் மகா வித்தியாலயம்

* எல்.எல்.ஜி.தமிழ் வித்தியாலயம்

1. அனைத்தையும் இழந்த சுமார் 60 குடும்பங்கள் (5 வகுப்பறைகளில்)

2. மீரியபெத்த தோட்டத்தைச் சார்ந்த பாதிக்கப்படாத குடும்பங்கள் (வியாழன் அன்று தோட்ட வாகனங்களில் தங்கள் பொருட்களையும் ஆடு மாடுகளையும் இவர்கள் பூனாகலை வித்தியாலயத்தை நோக்கி எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது).

3. மண் சரிவு அபாயத்தை எதிர் நோக்கும் ஏனைய இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள்
எவரும் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. மூன்று அறைகளில் கிடைத்த அனைத்து நிவாரணப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சமூக சேவைத் திணைக்களத்தினால் உடைகள் வழங்கப்பட்டதை வியாழன் அன்று காணக் கூடியதாக இருந்தது.

வேறு எதுவும் கொடுக்கப்படவில்லை. சுனாமியின் போது நிவாரணங்கள் சில பல தனி நபர்களைச் சென்றடைந்தது போல் இங்கும் நடக்க வாய்ப்புண்டு என்ற கருத்தும் மக்களிடையே காணப்படுகிறது.
19
நாளை முதல் வீடில்லாதவர்கள் மாகந்த தோட்டத்தில் உள்ள மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இது 1977ஆம் ஆண்டு ஜே.வி.பி. போராட்டத்தின் போது இராணுவம் தங்கவைக்கப்பட்டிருந்த இடமாகும். தற்போது விறகு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எதுவித வசதியுமற்ற இடம். இப்போதே மக்கள் வகுப்பறைகளில் மிகுந்த சிரமத்துடனேயே தங்கியுள்ளார்கள்.

வீடுகள் உள்ளவர்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்கள். வெடிப்புகள் உள்ளதால் மக்கள் வீடுகளுக்குச் செல்ல பயப்படுகிறார்கள். தற்போதும் வீடுகளுக்குச் சென்று பார்ப்பதும் மீண்டும் மாலையில் திரும்பி பாடசாலைக்க வருவதுமாக இருக்கிறார்கள்.

இந்த மக்களின் நலன்களுக்காக நீண்ட குறுகிய காலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

* இவர்களது சிவில் ஆவணங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக போய்விட்டதால் உடனடியாக இவர்களுக்கு இந்த ஆவணங்களைப் பெற்றுக் கொடுப்பது முதற் கடமையாக உள்ளது.

* அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான பொருத்தமான இடங்களை தெரிவு செய்ய வேண்டும். இவை தேசிய கட்டட ஆய்வு மையத்தினாலும் அனர்த்த நிருவாக நிலையத்தினாலும் பாதுகாப்பான இடம் என உறுதி செய்யப்பட வேண்டும்.

* மேலிருந்து கீழ் என்ற முறையில்லாமல் இது தொடர்பாக மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும்.

* பெற்றோரை இழந்த பிள்ளைகளை எக்காரணம் கொண்டும் அவர்களது சூழலில் இருந்து பிரிக்கக்கூடாது. அவர்களின் உறவினர்கள் மத்தியிலேயே அவர்கள் வளர்ந்து வருவது அவர்களின் உளவியல் பாதிப்புகளைக் குறைக்கும்.

* தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே காணி வழங்குவது என்ற கொள்கையை விடுத்து, மலையக தோட்ட சமூகத்திற்கு காணி வழங்க முன்வரவேண்டும். இந்தத் தோட்டத்தில் 40 வீதமான மக்கள் தோட்டத்தில் வேலை செய்யாத காரணத்தினால்தான் அவர்கள் லயன்களிலேயே வாழ நேரிட்டது.

அனைத்துப் பேதங்களையும் மறந்து அனைவரும் இவர்களின் நலன்களில் கூடிய கவனம் செலுத்துவது இன்றைய தேவையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அருட் தந்தை ச.கீதபொன்கலன்,