செய்திகள்

இராணுவ வெளியேற்றமும், காணிகளைக் கையளித்தலும் இடம்பெற வேண்டும்: வடக்கு முதல்வர்

இராணுவ வெளியேற்றம், சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீளக் கையளித்தல் தொடர்பான பாரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதை தன்னை சந்தித்த பிரித்தானிய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஐ.நா நடத்தும் போர்க்குற்ற விசாரணையின் அறிக்கை வெளியாவது தாமதமாகலாம் என்று தமிழ்மக்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் ஹியூகோ சுவைரிடம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர் இன்று காலை விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது:

“ஆட்சிமாற்றத்துக்குப் பிந்திய நிலைமை எவ்வாறு உள்ளது என்பதையும் வட மாகாணத்தில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கு அவர்கள் வருகை தந்தனர். புதிய அரசின் செயற்பாடுகள் பல விடயங்களில் நன்மை தருவதாக உள்ளது. குறிப்பாக ஆளுநர், பிரதம செயலர்  மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறினேன்.

இராணுவ வெளியேற்றம், சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீளக் கையளித்தல் தொடர்பான பாரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். வடக்கில் இருந்து இராணுவத்தை குறைப்பதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டினேன்.

இவற்றை மீளளித்தால், அவற்றை என்ன செய்வீர்கள் என்று என்னிடம் வினவினார்கள். மீளக்குடியேறாத மக்களின் நிலைமைகளையும் அவர்களது சொந்த நிலங்களையே இராணுவத்தினர் சுவீகரித்து முகாம் அமைந்துள்ளனர் என்பதை நான் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

இது பாரிய மாற்றதை ஏற்படுத்துமா என்பது அவர்களது அடுத்த வினாவாக இருந்தது. 99 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் வடமாகாணத்தில் உள்ளனர். விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு சிங்களப் பிரதிநிதியை அனுப்பும் சூழ்நிலை உருவாகும் என்று அவர்களுக்கு தெரிவித்தேன்.

இதன் பின்னரே இதில் இவ்வளவு சிக்கலான பிரச்சினை உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். வடமாகாணத்துக்கு கூட்டுறவுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உதவிகளை வழங்குவது தொடர்பாக தாம் ஆராய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது, எதிர்வரும் மார்ச் 26ம் நாள் வெளியிடப்படும் என் அறிவிக்கப்பட்ட ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளதாக தெரிவித்தேன். இது பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்றும் பிரித்தானிய அமைச்சர் தெரிவித்தார்” என்றும்  முதலமைச்சர் கூறினார்.