இருதேசம் ஒருநாடு: விவாதம் தந்த சில கேள்விகள்
– சாந்தி சச்சிதானந்தம்–
கடந்த மே மாதம் 15ஆம் திகதி யாழில் ஓர் சுவாரஷ்யமான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந் திரகுமார் பொன்னம்பலத்துக்கும் த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையேயான விவாதமே அதுவாகும். ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் தவராஜா உள்ளிட்ட யாழில் இயங்கும் பல அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டிருந்தார்கள்.
எதிர்பார்த்தது போலவே அவ் விவாதமும் இரு தேசம் ஒருநாடு என த.தே.ம.மு. இன் நிலைப்பாடு ஒருபக்கமாகவும் அதிகாரப் பகிர்வு என த.தே.கூ. இன் நிலைப்பாடு மறுபுறமாகவும் இந்த சித்தாந் தங்களை (அப்படி இவற்றை அழைக்கலாமோ?) மையமாக வைத்து நடத்தப்பட்டது. தாமும் இரு தேசம் ஒருநாடு என்ற கொள்கையின் அடிப்படையில்தான் செயற்படுகின்றார்கள். எனினும் அணுகுமுறைதான் வேறு என சுமந்திரன் விளக்கினார். இரு தேசம் என்பதனால்தான் எங்கள் தேசத்துக்கு அதிகாரப்பகிர்வினைக் கோருகின்றோம் என்பது அவரது வாதமாக இருந்தது. கஜேந்திரகுமாரின் வாதமோ, என்ன பேரம் பேசுதலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்றும் அதனைவைத்துக்கொண்டே சர்வதேச சமூகத்துடன் நாம் கலந்துரையாட வேண்டும் என்றுமாக இருந்தது.
இதற்குள் பார்வையாளர்களிடமிருந்து ஒரு ஆதங் கம் வெளிக்கிளம்பியது. முன்னோக்கிய பாதை எது என்பதே கூட்டத்தின் தலைப்பு. ஆனால் இரு பேச்சாளர்களும் நடந்துபோன வரலாற்றையே பேசிக்கொண்டிருக்கின்றனரே என்பதுதான் அந்த ஆதங்கமாக இருந்தது. அதற்கு கஜேந்திரகுமார் பதிலளிக் கையில், இன்று தென்னாசியப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்த நினைக்கும் நாடு ஒவ்வொன்றும் தமிழர் பிரச்சினையை மையமாக வைத்தே இலங்கை அரசின் கையை முறுக்குகின்றன.
எனவே இந்த கோள அரசியலை புரிந்துகொண்டு இரு தேசம் ஒருநாடு என்கின்ற சித்தாந்தத்தினை வலியுறுத்தித் தீர்வைப் பெறவேண்டும் என்பதே தனது முன்னோக்கிய பாதை என்றார். சுமந்திரனோ ஆட்சிமாற்றம் நடைபெற்றிருக்கின்றது, நாம் உணர்ச்சி வசப்படா மல் ஒரு அணுகுமுறையைக் கைக்கொண்டிருக் கின்றோம், பாருங்கள் இன்னும் சில வருடங்களில் எமது முறைதான் வெற்றியடையப் பார்ப்பீர்கள் என்றார். மொத்தத்தில் முன்னோக்கிய பாதை பற்றி இருவருக்கும் தெளிவிருப்பதாக எமக்குத் தெரியவில்லை.
முதலில் கஜேந்திரகுமாரின் விளக்கங்களை நாம் எடுத்துக்கொள்வோம். அந்தக் காலத்தில் எனது தகப்பனார் சமசமாஜக் கட்சி ஆதரவாளராக இருந்ததனால் தமிழரசுக் கட்சியின் அரசியலை எந்நேரமும் கேலிசெய்வதுதான் அவருடைய வேலை. அக்கட்சியின் அரசியலை நடிகை வைஜயந்திமாலாவைத் திருமணம் செய்யவிரும்புகின்ற ஒருவனுடைய பேச்சுடன் ஒப்பிடுவார். நான் வைஜயந்திமாலாவை திருமணம் செய்வது ஐம்பது வீதம் உறுதியாகி விட்டது. எப்படி? எனக்கு விருப்பம், இனி அவர் தன்னுடைய விருப்பத்தைச் சொன்னால் சரி. தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளும் அப்படித்தான் என்பார் அப்பா. அதேபோலத்தான் இந்த இரு தேசம் ஒருநாடு என்கின்ற கோஷமும். நாம் சொல்லியாயிற்று.
இனி அதனை சிங்களதேசமும் சர்வதேசமும் அங்கீகரிக்க வேண்டுமே. கோள அரசியலில் இதுவரை கால மும் வல்லரசுகளுக்கு சாதகமான நிலைமை ஒன்றிற்கு மட்டுமே அவை தேசியங்களின் சுயநிர்ணய உரிமையினை ஆதரித்திருக்கின்றன என்னும் யதார்த்தத்தினையே நாம் கண்டிருக்கின்றோம். துர திர்ஷ்டவசமாக இலங்கை அவ்வகையான நலன்களுக்குள் அடங்கவில்லை. இலங்கை அரசின் கையை முறுக்க வேண்டுமாயின், போர்க்குற்ற விசாரணை, நல்லிணக்கம், தற்போதிருக்கும் அரசியல் கட்டமைப்பிற்குள் பொருந்தக்கூடிய அதிகாரப்பகிர்வு இவற்றைத்தான் சர்வதேச சமூகம் தூக்கியிருக்கின்றது.
மேற்குலகத் தலைவர்கள் திரும்பத் திரும்ப மனித உரிமைகள் என்பதைப் பற்றி வலியுறுத்துவதும் அதனாலேயே. அரசியல் சுயநிர்ணயம் என அவர்கள் பேசுவதில்லையே. அத்துடன் இந்தியா இருக்கும்வரை, காஷ்மீர் பிரச்சினை இருக்கும் வரை இந்தக் கதையை எடுப்பதே பிரச்சினைக்குரிய விடயமாகும். கோள அரசியலின் காரணிகளைப் பயன்படுத்தி எவ்வாறு இரு தேசம் ஒருநாடு என்கின்ற கொள்கைப் பிரகடனத்தை முன்னோக்கித் தள்ளலாம் என்கின்ற ஒரு மூலோபாயமும் த.தே.ம.மு இடமிருந்து வரவில்லை.
அடுத்ததாக, இரு தேசம் என்று நாம் கூறும்போது ஒன்று சிங்களதேசம், மற்றையது தமிழ் பேசும் தேசமாகிய வடகிழக்கு மாகாணம் என்றுதான் நாம் எடுத்துக் கொள்கின்றோம். இதுதான் எங்கள் தேசம் என்றால் இங்கு கிழக்கில் தமிழ் மக்களினை விடஅதிகமக்கள் தொகையைக்கொண்டு காணப்படும் முஸ்லிம் மக்களிடம் அவர்களும் இந்த இரு தேசம் ஒருநாடு என்கின்ற கொள்கையை ஆதரிக்கின்றனரா எனக் கேட்கவேண்டுமல்லவா? அப்படி அவர்களின் அரசியல் தலைமைகளுடனும் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடப்பட்டதா? ஏனெனில் அவர்களின் அங்கீகாரமின்றி நாம் அவர்கள் சார்பில் பேசமுடியாதே.
இதற்கு த.தே.ம.முயின் பதில் இல்லை என்றால், அவர்கள் கூறும் ஒருதேசம் வடமாகாணமாக மட்டும்தான் இருக்க முடியும். அப்படியானால் கிழக்குவாழ் தமிழ் மக்களின் நிலைமைஎன்ன? இதற்கான தீர்வுகளைத் தராது வெறுமனே இரு தேசம் ஒருநாடு என மெல்லுகிறது த.தே.ம.மு. மூன்றாவதாக, இதன் நடைமுறைச் சாத்தியம் பற்றிச் சிந்திக்க வேண்டியதாக இருக்கின்றது. சர்வதேச சமூகம் இரு தேசம் ஒருநாட்டை அங்கீகரித்து அதற்காக இலங்கை அரசுடன் பொருதுகிறது என கற்பனையில் வைத்துக்கொள்வோம். அதனை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் அது அங்கு என்னதான் செய்யமுடியும்.
கிழக்கு ஐரோப்பிய நாடு களில் நேட்டோவின் படைகளைக் கொண்டே அங்கு நாடுகள் பிரிக்கப்பட்டன. அவ்வகையான இராணுவ அழுத்தச் சக்தியினை இந்தியா இருக்கத் தக்கதாக எந்தநாடும் இங்கு கொண்டு வரமுடியுமா? இந்த அரசியலைப் பற்றியோ அல்லது அதற்கானவாய்ப்புக்களைப் பற்றியோ எங்குமே பேச்சில்லை. எங்குசுற்றி ஓடினாலும் கடைசியில் தென்னிலங்கையின் ஒத்துழைப்புடன்தான் அரசியல் தீர்வினை நாம் பெற லாம். அந்த ஒத்துழைப்பினைப் பெறுவதற்கு என்ன மூலோபாயம் தம் வசம் இருக்கின்றது என எங்கும் கூறப்படவில்லை.
அவ்வாறு சிங்கள மக்கள் ஒத்துழைக்கமாட்டார்கள் என நாம் நம்பினால் பேரம் பேசுதலில் அவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கக்கூடிய அவர்களுக்கு நட்டம் ஏற்படுத்தக் கூடிய என்ன துருப்புச் சீட்டு இவர்கள் வசம் இருக்கின்றது? இப்பொழுது தமிழ் மக்கள் வசமிருக்கின்ற துருப்புச் சீட்டு எது என்பதனையும் கூறவில்லை. இந்த இரு நாடு ஒருதேசம் என்னும் கோஷம் ஏதோ பெரிய உரிமைவாதம் போல மக்களை திசை திருப்பும் செயலாகத்தான் இப்பொழுது முடிகிறது.
இந்த யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு தானோ என்னவோ த.தே.கூ. மென்மையான அணுகுமுறை யைக் கையாண்டு இந்த அரசாங்கத்துடன் தொடர்பு நிலையில் இருக்கின்றது என நினைக்கின்றேன். முரண்பாடுகள் உருவாவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒவ்வொரு நிலைப்பாட்டில் நிற்பதுதான் காரணம் எனக் கருதப்படுகின்றது.
ஆனால் அந்த ஒவ்வொரு நிலைப்பாட்டின் பின்னணியிலும் தொக்கி நிற்கும் நலன்களைப் பற்றிப் பேசினால் முரண்பாடுகளைத் தீர்க்கும் வழி பிறக்கும் எனக் கூறுகின்றனர். உதாரணமாக இரு தேசம் ஒருநாடு என்பது ஒருநிலைப்பாடு மட்டுமே. அது ஒரு கோஷமாகும். அதைச்சொல்ல நாங்கள் வாயைத் திறந்தவுட னேயே சிங்கள தீவிரவாதம் கண் விழித்துக்கொள் ளும். அதற்குப் பிறகு அங்கு அறிவு பேசாது உணர்ச்சி வேகங்கள் தான் பேசும்.
மாறாக, அதனையே அக்கோரிக்கைக்குப் பின்னாலிருக்கும் நலன்களைக் குறித்து,தமிழ் மக்கள் தமது நிலம், வளங்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அரசியல் கட்டமைப்புக்கள் அனைத்தையும் தமது மேலாண்மையில் வைத்தால் தானே அந்தமக்களின் அபிவிருத்திக்கான உரிமையை நாம் செயற்படுத்தலாம் எனக் கேள்வியைத் திருப்பிப் போட்டோமென்றால், அதைச் செய்யவிடமாட்டோம் என எவரும் கூறுவதுகடினம். அதற்குப் பின்பு எந்த வளம், எந்த அரசியல் கட்டமைப்பு என பேச்சுவார்த்தைகளை நீட்டலாம். இந்த விடயத்தைத்தான் சுமந்திரன் தாம் அதேகொள்கையின் கீழ் அதிகாரப் பகிர்வினைக் கோருகின்றோம் எனக் கூறினார் போலும்.
ஆயினும், த.தே.கூ சொல்லுகின்ற அதிகாரப் பரவலாக்கல் எதுவரையில் என்பது தமிழ் மக்களுக் குத் தெளிவாக இதுவரை விளக்கப்படவில்லை. இடையிடையே 13 ஆவது திருத்தச் சட்டத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். பின்பு ஒரு அதிகாரப்பகிர்வு பற்றியும் பேசுகின்றனர். நாம் தமிழ் மக்கள் விரும்பும் சமஷ்டி அரசுக்கான ஒரு நகலையும் இதுவரை தெளிவாக மக்கள் முன் வைத்தது கிடையாது. இவர்கள் கோருபவற்றை அரசாங்கம் தராவிடில் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்யவும் தயாராக இருப்பதாக அவர்களுடைய செயற்பாடுகள் காட்டு கின்றன.
எமது அரசியல் கோரிக்கைகளில் எதனை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கின்றோம் என்பது தீர்மானமாகிவிட்டதா? மே 18 இனை பிரி வினைவாதத்திற்கு எதிரான நாள் என அரசாங்கம் பிரகடனம் செய்தால் அதனை தாம் ஆதரிப்பதாக சம்பந்தன் அறிக்கைவிடுகின்றார். அவ்வாறாயின் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தினை மறுத்து சிங்களத் தலைவர்களுடன் ஒட்டி உறவாடிப் பெற்றுக் கொள்ள முடிவதைப் பெற்றுக் கொள்வதா இவர்களுடைய மூலோபாயம்? அதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இவர்களின் வேலைத்திட்டங்கள் என்ன? அதனைத் தயவுசெய்து விளக்குவார்களா?
ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கோரிக்கைகள் வெறுமனே அம்மக்களின் தலை வர்களினால் மட்டும் கேட்டுப் பெற்றுக்கொள்கின்ற தொருவிடயமல்ல. அனைத்து மக்களும் பங்களிக் கும் ஒரு திட்டமிடப்பட்ட போராட்டத்தின் மூல மாகவே எங்கும் உரிமைகள் பெறப்பட்டிருக்கின் றன. அதனை செயற்படுத்துவதற்கு மக்கள் வலு வூட்டப்பட வேண்டும். எங்கள் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்டு மனமுடைந்து பொரு ளாதாரப் பாதிப்பினில் வாழும் மக்கள் மத்தியில் எழுச்சி உண்டாக்குவதற்கான அபிவிருத்திச் செயற் திட்டங்களை அமுல்படுத்துவதும் இந்த அரசியல் வழிமுறையின் ஓரம்சமே. அநாதரவாக இருக்கும் முன்னாள் போராளிகள், குடும்பங்களுக்குத் தலை மைதாங்கும் பெண்கள், இளைஞர்கள், விவசா யிகள், மீன்பிடித் தொழிலாளிகள் போன்ற சமூகக் குழுக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் என்ன வைத்திருக்கின்றனர் என்பது பற்றியும் இரு பக்கத் திடமிருந்தும் ஒரு பேச்சுமில்லை.
அன்று நடந்த விவாதம் ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாகும். இவை போன்ற நிகழ்வுகள் தொடர வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் மெல்ல கேள்விகளை எழுப்பும் நிலைக்கு வருவர். அவர்கள் கேள்விகளை எழுப்பும்போது தான் எமது அரசியல் தலைவர்களினது பார்வைகளும் பாதைகளும் தெளிவாகும்.