செய்திகள்

இருபது வருட முகாம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: வவுனியா சிதம்பரபுரம் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள்

வவுனியா மாவட்டத்திலுள்ள சிதம்பரபுரம் முகாமில் வாழும் மக்களுக்கு அதே இடத்தில் காணிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் உள்ளக மற்றும் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து நாடு திரும்பியவர்களில் 193 குடும்பங்கள் கடந்த 20 வருடங்களாக சிதம்பரபுரம் முகாமில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் இவர்களின் நிலை தொடர்பில் வடக்குமாகாண புனர்வாழ்வு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இவர்களுக்கு குடும்பமொன்றிற்கு தலா நான்கு பரப்பு காணி வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான காணி அனுமதிப்பத்திரமும் வழங்கப்படவுள்ளது.

காணி அனுமதிப்பத்திரமும், தற்காலிக வீடுகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19.04.2016 வடக்குமாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். இவர்கள் குடியிருப்பதற்கான தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 69,000 நிதி வழங்கியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N5