செய்திகள்

இரு நாள் பயணமாக மார்சில் இலங்கை வருகின்றார் மோடி: உறுதிப்படுத்துகிறார் தூதரக அதிகாரி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கை வரவுள்ளார் என்பதை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். மார்ச் மாத நடுப்பகுதியில் மோடி இலங்கை வருவார் என்பதை உறுதிப்படுத்திய குறிப்பிட்ட அதிகாரி, இதற்கான திகதி மட்டும் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

திகதிகளை இறுதிசெய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டபோதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 14ஆம், 15ஆம்திகதிகளில் இருநாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

1987ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி விஜயம் மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகைதரும் முதலாவது சந்தர்ப்பமாக நரேந்திர மோடியின் விஜயம் அமையவுள்ளது.

மன்மோகன் சிங் 2008ஆம் ஆண்டில் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தமை போன்று பல்தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர்கள் வந்திருந்தாலும் 28 ஆண்டுகளாக அரசுமுறைப் பயணத்தை இந்தியப் பிரதமர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக பெப்ரவரி 16ஆம் திகதிமுதல் 19ஆம் திகதிவரை புதுடில்லிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கொழும்பு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.