செய்திகள்

இறங்கிச்செல்லும் அரசியலுக்கு செல்ல தயாராக இல்லை: அமைச்சர் எம்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகம் பசிகொண்ட சமூகமாகவுள்ளது.நாங்கள் தேவையுள்ள சமூகமாக இருந்துகொண்டு இன்னும்இன்னும் இறங்கிச்செல்லும் அரசியலுக்கு செல்ல முஸ்லிம் சமூகம் தயாராக இல்லை என சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பட்டிருப்பு பகுதியில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் களுவாஞ்சிகுடீ பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தேசியத்தில்,பிராந்தியத்தில் அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்வதில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதற்க யாரும் அச்சம்கொள்ளத்தேவையில்லையென்பது எனது கருத்தாகும்.நாங்களும் மகிந்த அரசாங்கத்தில் அமைச்சுகளை வைத்திருந்தவர்கள்,அதிகாரத்துடன் இருந்தவர்கள் உரிய நேரத்தில் தைரியமாக அங்கிருந்துவெளியேறி அந்த மகிந்த ராஜபக்ஸவுக்கு இந்த சிறுபான்மை சமூகம் என்ன செய்யும் என்பதற்கு பிள்ளையார் சுழிபோட்ட பெருமை எனக்கும் உள்ளது,உங்களுக்கும் உள்ளது.

நாங்கள் சமூகம் சார்ந்த அரசியலைபேசும்பொழுது அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கவேண்டுமா,இல்லையா என்பது அல்ல பிரச்சினை.தான் சார்ந்த சமூகத்திற்கு எங்கிருந்தாலும் நன்மைசெய்யமுடியுமா என்று சிந்திக்கின்ற அரசியல்களம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் உருவாகும் என்ற நிலைமை தென்படுகின்றது.

அதன்முதன்படியாகத்தான் கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப்பதவிகளைப்பெற்று இந்த பணியை ஆரம்பித்துள்ளார்கள்.ஆனால் கிழக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுகள் சரியாக செயற்படுகின்றார்களா என்ற கவலையுள்ளது.ஆட்சியாளர்கள் எப்போதும் மற்றவர்களை தயார்படுத்துகின்ற,வழிநடத்துகின்ற வேலைத்திட்டங்களிலேயே கவனம் செலுத்தவேண்டுமேயொழிய மற்றவர்கள் வழிநடாத்தும் அரசியல் தலைவர்களாக இருப்பார்களானால் அவர்கள் சிறந்த நிர்வாகியாக இருக்கமுடியாது.

மிகவும் பழமையான கட்சி,கல்விமான்களைக்கொண்ட கட்சி,அனுபவங்களைக்கொண்ட கட்சியில் வந்தவர்களும் சறுக்கும் நிலையேற்படுகின்றது என்றால் சிறுபான்மை சமூகம் என்ற ரீதியில் இந்த பிராந்தியத்திற்கு கவலையான விடயம்.அது எதிர்காலத்தில் சரிசெய்யப்படவேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று தொலைக்காட்சியை திறந்தாலே எவ்வாறு கோடிகோடியாக கொள்ளையடித்துச்சென்றார்கள் என்றே காட்டுகின்றது.இந்த நல்லாட்சியில் யார் யாரெல்லாம் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார்களோ அவர்கள் அனைவரும் இந்த அரசாங்கத்தில் தண்டிக்கப்படுவார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் இந்த பிரதேசத்தில் நடந்தேறியுள்ள ஊழல்களை ,பிரச்சினைகளை சரியானமுறையில் தாக்கல் செய்யப்படுகின்றபோது இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் சிறப்பாக அதனைசெய்வார்கள்.

இந்த அரசாங்கம் சிங்களவர்,தமிழர்கள்,முஸ்லிம்கள் என்ற பேதங்களுக்கு அப்பால் இருந்து செயற்படுகின்ற பார்வையுள்ளது.அவற்றில் ஏதாவது சிறுபான்மை சமூகத்தினை கவருகின்ற நம்பிக்கை வைக்கின்ற வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும்போது அந்த அரசாங்கத்துக்கு நன்றி கூறுகின்ற மனப்பக்குவத்தினை நாங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும்.இது மனித நேயத்துடன் செய்யப்படுகின்ற விடயம்.எல்லாவற்றையும் நாங்கள் குறையோடு பார்க்காமல் சமூகத்திற்காக செய்யப்படுகின்ற காரியங்களுக்கு நாங்கள் நன்றியோடு பார்க்கும் நிலை இருக்கவேண்டும்.

கடந்த காலத்தில் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பாதுகாப்பு தரப்பினர் விடாமல் வைத்திருந்த நிலையில் இந்த நல்லாட்சிக்கான அரசாங்கம் வந்தவேளையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனைவரும் ஒன்றிணைந்து இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை பகுதிபகுதியாக விடுவித்துவருகின்றார்கள் என்றால் அதற்கு சிறுபான்மை நன்றிகூற கடமைப்பட்டுள்ளது.அதற்கு நானும் நன்றி கூறுகின்றேன்.அரசியலில் ஏற்றம் இறக்கம் வரும்.ஆனால் இந்த ஏற்ற இறக்கம் நிரந்தரமான விடயம் அல்ல.

எதிர்காலத்தில் அமைச்சுகளை அலங்கரிக்கும் உறுப்பினர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை நான் பார்க்கிறேன்.இந்த மாற்றம் எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் வரக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.

சிறுபான்மை சமூகம் பசிகொண்ட சமூகமாகவுள்ளது.நாங்கள் தேவையுள்ள சமூகமாக இருந்துகொண்டு இன்னும்இன்னும் இறங்கிச்செல்லும் அரசியலுக்கு செல்ல முஸ்லிம் சமூகம் தயாராகஇல்லை.முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழ் தலைவர்களிடத்திலேயே அரசியலை படித்தார்கள்.அவரசப்படும் சமூகத்திற்கு அவசரமான பணியை செய்யும் வகையில் அவர்கள் எங்களை மாற்றினார்கள்.

எதிர்வரும் காலம் இந்த அரசாங்கதில் எங்களது எதிர்பார்ப்புகள்,மக்களுடைய எதிர்பார்ப்புகள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையுள்ளது.அதற்காக பிரதேச அரசியல்வாதிகள் நாம் பேதங்களை மறந்து ஒன்பட்டுசெயற்படுவோம்.

IMG_0075 IMG_0066 IMG_0046 IMG_0039 IMG_0006