செய்திகள்

இறுதிக்கட்ட கட்சி தாவல்கள் அடுத்த சில நாட்களில்?

அடுத்த 72 மணித்தியாலத்திற்குள் இறுதிகட்ட கட்சித்தாவல்கள் இடம்பெறலாம் எனவும் ஜனவரி 5ம் திகதி நள்ளிரவுடன் அவை முடிவிற்கு வருமெனவும் அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தில் அமைச்சர் பதவிவகிக்கும் சிலர்  உட்பட  பலர் தமது தரப்பிற்கு வரலாம் என எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் 5 ம் திகதிக்கு முன்னர் தம்முடன் இணைவார்கள் எனவும் அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நடைபெறும் மாபெரும் இறுதி பிரச்சாரக் கூட்டத்தில் சிலர் கலந்துகொள்வார்கள் எனவும் அவை தெரிவித்துள்ளன. அமைச்சர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரங்களிலிருந்து விலகிநிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்னர் எதிரணியில் இணைந்துகொண்ட பிரதிஅமைச்சர் நந்தமித்திர எக்கநானயக்க அமைச்சர் ஒருவரும் எதிரணியில் இணைந்துகொள்வதற்கான பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கமும் எதிரணியிலிருந்து பெரும் புள்ளியொன்றை கவர்வதற்கு மீண்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் திட்டம் வெளிப்படையானது. தேர்தலுக்கு முன்னர் அவர்களுக்கு எதிரணியிலிருந்து முக்கிய புள்ளியொன்றை இணைத்துகொள்ளவேண்டியது அவசியமாகவுள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.