செய்திகள்

இறுதிச் சடங்குக்காக இறந்த குழந்தைகளை தத்தெடுக்கும் அதிசய பெண் (படங்கள்)

சிலி நாட்டைச் சார்ந்த பெர்னர்டா கலார்டோ என்ற பெண்மணி, இறந்த குழந்தைகளை தத்தெடுத்து முறையாக இறுதிச் சடங்கினை செய்து புதைக்கிறார். 2003 ஆம் ஆண்டு புதிதாக பிறந்த குழந்தை ஒன்று குப்பையில் வீசப்பட்டதாக பத்திரிக்கை செய்தி பார்த்தவர், அப்போதிலிருந்து கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இறந்த குழந்தைகளை தத்தெடுத்து வருகிறார்.

இது குறித்து கலார்டோ கூறும்போது, ”சிலி நாட்டில் கைவிடப்பட்டு இறக்கும் குழந்தைகளை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்றால் அந்தக் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும். அதற்காகத்தான் நானே தத்தெடுத்து அந்த குழந்தைகளுக்கு இறுதி மரியாதை செலுத்துகிறேன். சிலி நாட்டில் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களில் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் இளம்பெண்கள், அந்த குழந்தைகளை விரும்புவதில்லை. மேலும், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால் கருவை கலைக்கவும் முடியாமல், குறிப்பாக தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்பதையே வெளியில் சொல்ல வெட்கப்பட்டு அப்படியே மறைத்துவிடுகின்றனர்.

அப்படி பிறந்த குழந்தைகள், அனாதைகளாக குப்பையில் வீசப்படுகின்றன. இன்னொரு காரணம் வறுமை. வறுமையால், பராமரிப்பாளர் இன்றி இறக்கும் குழந்தைகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மட்டும் எப்படி முடியும். 2003 ஆம் ஆண்டு பத்திரிக்கையில் குப்பையில் வீசப்பட்டிருக்கும் குழந்தைப் பற்றி பார்த்ததுமே எனக்கு மனசு கேட்க வில்லை அந்த குழந்தைக்கு இறுதி அஞ்சலியாவது முறையாக நடக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த குழந்தைக்கு ‘அவுரோரா’ என்று பெயர் வைத்து முறையாக இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தேன்.

இறந்த அந்த குழந்தையை நான் தத்தெடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னபொழுது, எல்லோரும் நான் தான் அந்த குழந்தையின் தாயார், மனசாட்சி உறுத்தவே தத்தெடுத்து முறையாக அடக்கம் செய்கிறேன் என்றே நினைத்தனர். பிறகு, தத்தெடுத்துக்கொள்ள அனுமதியளிக்கும் ஜட்ஜிடம் உண்மையை விளக்கி என் விருப்பதை தெரிவித்து அவுரோராவை தத்தெடுத்துக் கொண்டேன்.

உண்மையில் இது விசித்திரமான ஒன்று, இதுவரை யாரும் இறந்தவர்களை தத்தெடுத்துக் கொண்டதேயில்லை என்று அனைவரும் வியந்தனர். பல்வேறு கருத்துக்கள் வந்தாலும் நான் செய்வது சரியானது தான் என்று என்னை நம்புகிறேன். அவுரோராவின் இறுதி அஞ்சலிக்கு கிட்டதட்ட 500 பேர் வரை வந்திருந்தனர். அவ்வூரின் லோக்கல் பேப்பரில் இச்செய்தி இடம்பெற்றது. அங்கே குழந்தைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். அதன்பின், அடுத்தடுத்து ஆதரவின்றி இறக்கும் குழந்தைகளை தத்தெடுத்து வருகிறேன். மன்யூல், விகடர், கிறிஸ்டோபல் இப்படியே நீள்கிறது அந்த பட்டியல்” என்றார்.

மேலும், உங்களுக்கு வேண்டாம் என்றால் குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு கொடுத்துவிடுங்கள் கசக்கி குப்பையில் வீச வேண்டாம் என்று அறிவுறுத்தும் கலோர்டா, 1976 ஆம் ஆண்டு எனக்கு 16 வயதானபோது உறவினர் ஒருவரால் நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். அதன் மூலமாக எனக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. அந்த தருணத்தில் எனக்கு உதவியது நண்பர்கள்தான். நண்பர்கள் மட்டும் அப்போது எனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் நானும் மற்றவர்களைப் போல சோக முடிவினை எடுத்திருக்க கூடும் என்றே நினைக்கிறேன்” என்கிறார்.

இவரைப் பார்த்து வியந்த இயக்குனர் ரோட்ரிகோ “அவுரோரா” என்ற பெயரில் திரைப்படம் ஒன்றினை எடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அந்த திரைப்படம், சான்டிகோ இன்டர்னேசனல் பிலிம் பெஸ்டிவலில் சிறந்த திரைப்படம் என்ற விருதினை பெற்றிருக்கிறது.

1

2

3