செய்திகள்

இறுதி யுத்தத்தின் கடைசி 8 மாதங்களில் 1,46,679 பேர் திட்டமிட்டு கொல்லப்பட்டனர்: ஆயர் இராயப்பு ஜோசப் மீண்டும் தகவல்

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது இறுதி எட்டு மாத காலப்பகுதியில் 1, 46, 679 மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பேரணியின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இவ்வாறு தெரிவித்த ஆயர், போர் நடைபெற்ற காலப்பகுதியில் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின்படியே இதனை தெரிவிப்பதாகவும் கூறினார்.

முன்னைய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஜனவரி 2011 ஆம் ஆண்டு வழங்கிய ஒரு அறிக்கையில் ஆயர் இந்த புள்ளிவிபரங்களை முதன் முதலாக குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய பேரணியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

மார்ச் மாதம் வெளிடவேண்டிய இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையினை பிற்போட்டிருக்கின்றார்கள். குறித்த அறிக்கை மூலம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குங்கள் எனக் கேட்டும் அந்த அறிக்கை பிற்போடப்பட்டதன் ஊடாக தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை எமக்கு சர்வதேசம் புலப்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் அந்த அறிக்கையினை மேலும் தாமதப்படுத்துவதற்கும் முயற்சிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே தமிழர்களுக்கான நீதியை கோரி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம். இலங்கை கூறிய உள்ளக விசாரணை என்ற பேச்சினை சர்வதேசம் நம்பியருக்கின்றது. ஆனால் அதனை நாம் ஒத்துக்கொள்ள முடியாது.

இலங்கையில் உள்ளவர்களே தமிழர்களுக்கு அநீதி புரிந்தார்கள். அவர்களிடமே சென்று நாங்கள் எப்படி நீதி கேட்க முடியும்? குற்றவாளியும் நீதிபதியும் ஒருவனாக இருக்க முடியுமா?

பாரபட்சமற்ற வகையில் சர்வதேசம் குறிப்பாக ஐ.நா விசாரணை நடத்துவதன் ஊடாகவே தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின்படி 1லட்சத்து 46ஆயிரத்து 879மக்கள் இறுதிப்போரில் குறிப்பாக 8மாதங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தப் படுகொலைகள் சூட்டுத்தவிர்ப்பு வலயங்களிலும், சூனிய வலயங்களிலுமே இடம்பெற்றிருக்கின்றன.

மக்கள், விடுதலைப் புலிகளை எதிர்த்து விடுதலைப் புலிகளிடமிருந்து வெளியே வந்துவிடவேண்டும், அப்போது தாம் யுத்தத்தை வென்றுவிடலாம் என்ற நோக்கத்திற்காகவே இந்தப் படுகொலைகளை செய்தார்கள். மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தார்கள்.

சூட்டு தவிர்ப்பு வலயங்கள் என அடையாளப்படுத்தி, அங்கிருந்து வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு ஒக்டோபர் மாதத்தில் மீண்டும் மீண்டும் அவ்வாறான சூட்டுத்தவிர்ப்பு வலயங்களையும், சூனிய வலயங்களையும் உருவாக்கி மக்களை அதனுள் கொண்டுவந்ததன் பின்னர் சாட்சியங்களே இல்லாமல் கொன்று குவித்தார்கள்.

இவ்வாறான நிலையில் தற்போதுள்ள அரசாங்கத்தின், நல்லவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் நல்லவர்களும் நீதியை நிலைநாட்டாமல் அமைதியாக இருந்தார்கள் என்பதே உண்மையாகும்.

எனவேதான் நாங்கள் கேட்கிறோம், உள்நாட்டு விசாரணையில் துளியேனும் எமக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் சர்வதேச விசாரணையினையே எதிர்பாரத்திருக்கின்றோம் என்றார்.