செய்திகள்

இலக்கு வைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள்

லோ. விஜயநாதன்

2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்ட தளங்களும் போராடுபவர்களும் பெரும் மாற்றங்களுக்குள்ளாகி உள்ளன / உள்ளனர்.

070409france1ஆயுதங்களுக்குப் பதிலாக இராஜதந்திரமும் போராட்ட தளங்களாக சர்வதேசத்தளமும் தாயகமும் போராடுபவர்களாக புலம்பெயர் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் உள்ளனர். முள்ளிவாய்க்காலில் நயவஞ்சகமாக இனவழிப்பை மேற்கொண்டு தமிழர்களை வீழ்த்திவிட்டதாகவும் சிறிலங்காவில் சமாதானம் மலர்ந்துவிட்டதாகவும் மார்தட்டி நின்ற சிங்களத்தை, இல்லை நாம் வீழ்த்தப்பட முடியாதவர்கள் தமிழீழத்தில் இழந்துவிட்ட ஆட்சியுரிமையை மீண்டும் பெறும்வரை போராடுவோமென புலம்பெயர் தேசத்து வீதிகளில் பொங்கியெழுந்த புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே இன்று சிங்களத்தை யுத்தக்குற்றவாளியாக்கி விசாரணையை எதிர்கொள்ளச் செய்துள்ளது.

இதனை நன்குணர்ந்த சிறிலங்காவின் புதிய ஆட்சியின் பழைய தலைவர்கள் எப்படித் தமிழனை வைத்து அதாவது எப்படி லக்ஸ்மன் கதிர்காமர், கருணா போன்றவர்களை வைத்து தமிழர்களை வீழ்த்தினார்களோ அதேபாணியில் சுமந்திரன், சுரேன் சுரேந்திரன் போன்றவர்களை வைத்து புலம்பெயர் தமிழர்களை வீழ்த்துவதற்கு முயன்று வருகின்றனர். இதைச் சிங்களதேசம் ஒவ்வொரு படிமுறையாக செயற்படுத்தி வருகின்றது.

z_p01-The-Foreign-Affairs-Ministryஅதன் முதற்படியாக, தனது 19வது திருத்தச் சட்டத்தினூடாக இரட்டை பிரஜாவுரிமையுடையவர்களுக்கான வாக்களிக்குரிமையை இல்லாமல் செய்துள்ளது. அதாவது புலம்பெயர் தமிழர்களின் அரசியல் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு திருத்தச் சட்டத்துக்கு எம்மவர்கள் அதிலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் கையுயர்த்தி தமது ஆதரவை முழுமனதுடன் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அடுத்த படியாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்குதலை மீள புதிய நிபந்தனைகளுடன் வழங்கத் தொடங்கியுள்ளனர். அந்த நிபந்தனைகளை ஆராய்ந்து பார்த்தால், அவை முற்று முழுதாக புலம்பெயர் மக்களிடமிருந்து பணத்தை சிறிலங்காவின் திரைசேரியை நோக்கி நகர்த்தும் திட்டத்தைக் கொண்டிருப்பதை காண முடியும்.

imagesகடந்த ஏப்ரல் 7ம் திகதி, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் அரசாங்கத்துக்கான வருமானம் போதியளவில் இல்லாத காரணத்தினால் அதை நிவர்த்திசெய்யும் முகமாக Rs.400 மில்லியன் பெறுமதியான திரைசேரி முறிகளை விற்று வருமானத்தையீட்டுவதற்கான பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். ஆனால், அது தோற்கடிக்கப்பட்டிருந்தது. இது சிங்களதேசம் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றமையையே காட்டுகிறது. தற்போது இலங்கை அரசாங்கம் பாரியதொரு நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்று அண்மையில் லண்டனில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் தான், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் புலம்பெயர் தமிழ் மக்கள் வடகிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கு எவ்வாறு உதவாலாம் என்று சந்திப்பொன்றை சில புலம்பெயர் தமிழ்மக்களுடன் நடத்தியிருந்தார். அத்துடன், வெளிவிவகார அமைச்சினால் புலம் பெயர் மக்களுக்கான நிகழ்வு ஒன்றும் சிறிலங்காவில் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பும் வெளிவந்திருகிறது. இதுவரைகாலமும் வடமாகாண முதலமைச்சரால் கோரப்பட்டு வந்த முதலமைச்சர் நிதியம் அமைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கம் அனுமதி வழங்கி இருப்பதையும் இந்த நிகழ்வுகளில் வரிசையிலேயே பார்க்க வேண்டும்.

Ravinatha-Aryasinhaராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே புலம்பெயர் தமிழர்களின் வருமானத்தை குறிவைத்து நகர்வுகள் எடுக்கப்பட்டிருந்தன. அதனால்தான், மகிந்த ராஜபக்ச 2011ல் வெளிப்படையாகவே புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்காவில் நடைபெறும் அபிவிருத்தியில் பங்கு கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு மேலதிகமாக அன்றைய ஐக்கியநாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகவிருந்த இரவிநாத் பி .ஆரியசிங்க, 2013ல் ஐக்கிய நாடுகள் சபையில் பின்வருமாறு கூறியிருந்தார். அதாவது சிறிலங்காவுக்கு புலம்பெயர்மக்களால் நேரடியாக அனுப்பப்படும் வெளிநாட்டு வருமானமானது 2012ல் $6 பில்லியனைத் தொட்டதாகவும் அது 2011 விடவும் 17% அதிகரிப்பு எனவும், மொத்த உள்நாட்டுற்பத்தியில் (GDP ) 10% என்றும் , அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 25% என்றும், அரசாங்கத்தின் மொத்த வெளிநாட்டு வருமானத்தில் 33% என்றும் கூறியிருந்தார். அத்துடன் புலம்பெயர் மக்களுடன் பரந்துபட்டளவிலான தொடர்பைப்பேண அரசு விரும்புவதாகவும் அதற்காக புலம்பெயர் முதலீட்டுச் சபை (Diaspora Investor Forum) ஒன்றை ஸ்தாபிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இதன் மூலம் புலம்பெயர்ந்தவர்கள் சிறிலங்காவின் திரைசேரி முறிகளிலும் மற்றும் முதலீட்டுத் திட்டங்களிலும் முதலிடமுடியுமெனவும் ஆசை காட்டியிருந்தார்.

gota-and-mahindaஆனால், அப்போதைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்காவுக்கெதிராக தீவிரமாக செயற்பட்ட காரணத்தினால் இம்முயற்சி அவர்களுக்கு கைகூடிவரவில்லை. அத்துடன், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையும் இலங்கைக்கெதிரான யுத்தக்குற்ற விசாரணையை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்ரியிருந்தது. இதனால் கோபம் அடைந்த சிறிலங்கா அரசு, 15 புலம்பெயர் அமைப்புக்களையும் 424 தனிநபர்களையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1373 தீர்மானத்தின் கீழ் தடை விதித்திருந்தது.

இந்த தடை சிறிலங்காவுக்கு எந்தவித அனுகூலத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதுடன் உண்மையில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியிருந்தது. இதனை புதிய ஆட்சி நன்குணர்ந்து அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. அதனால்தான், தனக்கு அரசியல் ரீதியில் பெரும் அபாயமாக மாறும் என்று தெரிந்திருந்தும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர லண்டனில் சில புலம்பெயர் அமைப்புக்களுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியில் எந்தளவுக்கு அபாயமானது என்று ஸ்ரீ லங்கா அரசு புரிந்துகொண்டிருந்தது என்பதற்கு, இந்த சந்திப்பு பற்றிய செய்திகள் வெளிவந்ததுடன் அதனை ஸ்ரீ லங்கா அரசாங்கம் நியாயப்படுத்த எடுத்த முயற்சிகள் காட்டுகின்றன. இராணுவத் தளபதியைக்கூட இந்த சந்திப்பை நியாயப்படுத்துவதற்கு ஸ்ரீ லங்கா அரசு பயன்படுத்தியிருந்தது.

UK-talksஇதுவரை, எப்படி சிறிலங்கா அரசு புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை இரட்டை பிரஜாவுரிமை என்ற போர்வையில் முடக்கியது என்பதையும் எப்படி அதன் பொருளாதார நலனுக்காக புலம்பெயர் தமிழ்மக்களை பயன்படுத்தலாம் என்று செயற்பட்டுவருகிறது என்றும் பார்த்தோம். ஆனால் தனியே இந்த இரண்டு நோக்கங்களையும் மட்டும் வைத்து ஸ்ரீ லங்கா செயற்படவில்லை. இதற்கு பின்னால் மிகப் பெரிய இராஜதந்திர வலைப்பின்னலை சிறிலங்கா விரித்துள்ளது. அதாவது, தாயகத் தமிழருக்கும் புலம்பெயர் தமிழருக்குமிடையிலான அரசியல்வெளியை ஏற்படுத்துதல், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கிடையேயான முரண்பாட்டை தோற்றுவிப்பதனூடாக அவர்களின் சர்வதேச ரீதியிலான அரசியல் செயற்பாட்டை மழுங்கடித்தல், தமக்கு சாதகமான புலம்பெயர் அமைப்புக்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கூடாக சர்வதேசரீதியில் சிறிலங்காவுக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்ற விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றி நீர்த்துப்போகச் செய்தல் போன்ற பல திட்டங்களை சிறிலங்கா கொண்டுள்ளது. இதற்கு இந்தியா, தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்புகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீ லங்கா விடயத்தில் நேர்மையான பூகோள அக்கறைகள் எதுவும் அற்ற நாடு என்ற தோற்றப்பாட்டை கொண்டுள்ள தென் ஆபிரிக்கா மூலம் புலம்பெயர் தமிழ் மக்களை தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வரலாம் என்பது ஸ்ரீ லங்காவின் கணக்கு.

ஆனால் , தென் ஆபிரிக்கா எந்தளவுக்கு நேர்மையான ஒரு நாடு என்பதையும் மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றை சர்வதேச சட்டங்கள் மூலம் நிலை நாட்டுவதில் அதன் பற்றுறுதியை சோதிக்கும் சம்பவமாக சூடான் ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றம் கைது செய்யக் கோரிய சம்பவம் அமைந்திருந்தது.

77b470109e5a46a4a5db21e365ce28b3_18தென்னாபிரிக்காவின் ஜோஹனஸ் பேர்க் நகரில் நடைபெறும் ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கேட்டதையடுத்து தென்னாபிரிக்க உயர்நீதிமன்றம் அவர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு இடைக்கால தடைவிதித்திருந்தது. இருந்தும் தென்னாபிரிக்க அரசு, சூடானில் இனப்படுகொலை, போர்க்குற்றச்சாட்டு மற்றும் மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்களை இழைத்ததாக்க குற்றம் சாட்டப்பட்ட பஷீர் தனது சொந்த நாட்டு உயர் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனம் செய்து அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை அனுமதித்திருந்தது.

தென்னாபிரிக்க அரசுடனும் அதன் முகவர் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த சம்பவத்தில் இருந்து சிலதை புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு, சிறிலங்காவால் அரங்கேற்றப்படும் சூழ்ச்சிகளுக்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தாங்கள்தான் எனக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகள் தாங்கள் தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயலும் உலக தமிழர் பேரவை ஆகியவை தெரிந்தோ தெரியாமலோ உதவி வருகின்றன.

UNTNA062714தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் நவம்பர் 23ந் திகதி 2013ல் வடகிழக்கு பொருளாதார அபிவிருத்தியும் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்குபற்றுதலும் (North East Economic Development and Diaspora Participation) எனும் தலைப்பில் லண்டன் ட்ரினிட்டி கொம்முனிட்டி சென்டர் ஹல்லில் (Trinity Community Centre Hall) நடத்திய கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து அவர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கும் இதுவரை என்ன நடைபெற்றது என்பது அவர்களுக்கே தெரியாது. அதன் பின்னர் , இந்த விடயத்தில் எதுவுமே நடைபெறவில்லை. அப்படியொரு முயற்சியை அவர்கள் முன்னர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் செய்ய முயன்றிருந்தபோதிலும், புதிதாக ஏன் திடீரென சிறிலங்காவுடன் கூட்டிணைத்து அதே முயற்சியை செய்யவேண்டியிருக்கிறது. இங்கேதான் இவர்கள் சலுகைகளுக்காக விலை போயுள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதை மேலும் வலுப்படுத்தும் முகமாக வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டும் அமைகிறது. ஆகவே , எதிர்வரும் தேர்தலில், மக்கள் களைகளை தெரிவு செய்து அகற்றவேண்டும்.

உண்மையிலேயே வடகிழக்கு மக்களின் மனிதாபிமானப் பிரச்சினையை தீர்ப்பதே எல்லோருடைய ஒரே நோக்கமாகவும் இருக்குமேயானால் ஏன் அவர்களால் புதிய அரசுடன் பேசி உடனடி மனிதாபிமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, வடக்கு கிழக்கு மாகாண அரசுகள் நேரடியாக வெளிநாட்டு உதவிகளை அந்தந்த மாகாண திறைசேரிகளினூடாக பெற்று அவற்றை செயற்படுத்துவதற்கு முன்வரவில்லை? இதே புதிய ஆட்சி (எதிர்கட்சி, ஆளும் கட்சி) சேர்ந்து பல புதிய திருத்தச்சட்டங்களையும் அரசியல் அமைப்புச் சபையையும் உருவாக்கமுடியுமென்றால் , ஏன் இது அவர்களால் இத்தகைய ஒரு நிதிப் பொறிமுறையை வடக்கு மற்றும் கிழக்குக்கு உருவாக்க முடியாது?. இங்கேதான் இவர்களின் சுயரூபம் வெளிப்படுகின்றது.