செய்திகள்

இலங்கைக்கு சிக்கல்கள் நிறைந்த சவாலாக நல்லிணக்கமும் பதிலளிக்கும் கடப்பாடும்

நல்லிணக்கம், பதிலளிக்கும் கடப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய விடயங்களிலும் மக்களின் ஆணையை பிரதிபலிக்கும் அரசாங்கத்தை வடிவமைப்பதிலும் இலங்கை சிக்கல்கள் நிறைந்த பல சவால்களுக்கு முகம்கொடுப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற அரசியலமைப்பு தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வில் உரை நிகழ்த்தும்போதே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்ததுடன் சமாதானம்,செழுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை கட்டியெழுப்ப அமெரிக்கா ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமெரிக்க தூதுவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இலங்கையர்களைப் போன்று அமெரிக்கர்களும் மனித உரிமைகள் முழு உலகிற்கும் பொதுவானவை என கருதுகின்றனர். சிறுவர்களுக்கு கல்விக்கான உரிமை, கண்மூடித்தனமாக தடுத்துவைத்தலை நிறுத்தல், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல், நீதியை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கான சட்டத்தின் ஆட்சியின் கடப்பாடு, தங்கள் மனதில் உள்ளதை தெரிவிப்பதற்கும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அனைத்து பிரஜைகளுக்கும் உள்ள உரிமை , தங்கள் மதத்தை அமைதியாகவும் வெளிப்படையாகவும் பின்பற்றுவதற்கான உரிமை, மேலும் தங்கள் தலைவர்களை சுதந்திரமாக தெரிவுசெய்வதற்கான உரிமை போன்றவையே அவை.
நான் ஒரு விடயத்தை வலியுறுத்த விரும்புகின்றேன். ஒவ்வொரு நாடும் தனது தலைவிதியை தானே தீர்மானிக்கவேண்டும். அதன் வரலாறு மற்றும் கலாசாரத்திற்கு ஏற்ற விதத்தில் தனது மாதிரியை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் காரணத்திற்காகவே
நீங்கள் அனைவரும் இங்கு கூடியுள்ளீர்கள்.
உங்களுக்கு வாக்களித்த மக்களை பிரதிநிதித்துவம் செய்து பொறுப்புக்கூறலையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்துவதற்காக, நீதியமைப்பை வலுப்படுத்துவதற்காக, அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் முன்னோக்கிச் செல்வதற்கான உங்கள் பாதையை தீர்மானிப்பதற்காக இங்கு சமுகமளித்துள்ளீர்கள்.
அமெரிக்காவும் இலங்கையும் மக்களின் அடிப்படை உரிமை குறித்த ஒரே மாதிரியான எண்ணங்களால் பிணைக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா இலங்கைக்கு உதவுகின்றது. அமெரிக்க அரசாங்கம் பொது விழுமியங்களின் அடிப்படையிலேயே அதன் அபிவிருத்தி பிரிவான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க அமைப்பு மூலம் (யு.எஸ்.எயிட்) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களின் தொழில்சார் பயிற்சிக்கு ஆதரவு வழங்குகின்றது.
அரச பணியாளர்கள் சிறந்த விதத்தில் சேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு, கொள்கைத் தீர்வுகளை முன்வைப்பதற்கு, கண்காணிப்பு நடவடிக்கைகளை வழங்குவதற்கு நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். நண்பர்களாக செயற்படுவோம். எமது உதவி இலங்கை மக்களுடனான 60 வருட தொடர்ச்சியான, இணைந்த செயற்பாடுகளை மேலும் வளர்க்கின்றது. யு.எஸ்.எயிட் பலதரப்பட்ட திட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. விவசாயம், வர்த்தகம், அபிவிருத்தி, கல்வி,உட்கட்டுமானம், சிவில் சமூகத்தைப் பலப்படுத்துதல், நல்லாட்சி, மனிதாபிமான உதவிகள் எனப் பல பிரிவுகளில் யு.எஸ்.எயிட் தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இலங்கை மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கம் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவற்றில் கருத்துச் சுதந்திரம், அரச ஸ்தாபனங்களின் சுயாதீன தன்மையை மதித்தல், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தல் போன்றவையும் காணப்படுகின்றன. எனினும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மக்களின் விருப்பத்தை, ஆணையைப் பிரதிபலிக்கும் அரசாங்கம் ஆகிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த முடிவுகள் இலங்கை மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களுக்கானவை.
இன்னுமொரு ஜனநாயக நாடு என்ற வகையில் அமெரிக்கா, சமாதானம் நிலவுகின்ற அனைவரையும் உள்ளடக்கிய,
செழிப்பு மிக்க எதிர்காலமொன்றை இலங்கைக்கு ஏற்படுத்துவதற்கான உங்களது முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்குத் தயாராகவுள்ளது.
n10