செய்திகள்

”இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவோம்”: ஐநா பொதுச் செயலாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்குச் சாதகமாக பெற்றுத் தருவோம் என்று அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில் இருவருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஐநா செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா தலைமையகத்துக்குப் பிரவேசித்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்ற குட்டரெஸ், 1978ஆம் ஆண்டில், சர்வதேச பாராளுமன்றச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்ததையும் கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்குச் சுற்றுலா சென்றதையும், அதன்போதான அழகான நினைவுகளையும் ஞாபகப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளராக, இலங்கை தொடர்பில் தான் பணியாற்றியமை மற்றும் 2006 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தமை குறித்தும், குட்டரெஸ் நினைவுபடுத்தினார்.

இதேவேளை சுமார் 30 ஆண்டுகள் நிலவிய யுத்தம் காரணமாக, மிகவும் சிக்கலான நிலைமைக்கு விழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், இந்து சமுத்திர வலயத்தில், மாபெரும் சமூக மற்றும் பொருளாதாரப் பணிகளை நிறைவேற்றும் இலங்கையிடமிருந்து, தொடர்ந்தும் அப்பணியை எதிர்பார்ப்பதாக, பொதுச் செயலாளர் எடுத்துரைத்தார்.