செய்திகள்

இலங்கைத்தீவு விவகாரம்- இந்திய அணுகுமுறையும், அமெரிக்க நிலைப்பாடும்

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கையாளும் அணுகுமுறையோடுதான் அமெரிக்கா ஒத்துச் செல்கிறது. ஜப்பானும் அதற்கு விதிவிலக்கல்ல. 2002 சமாதானப் பேச்சு காலத்திலும் இந்த ஒழுங்குதான் இருந்தது. 13 ஐ இந்தியா சம்பிரதாயபூர்வமாகவே கோருகின்றது என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் அறியாதவர்கள் அல்ல.

-அ.நிக்ஸன்-

சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்த இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கவும், மேலதிகமான கடன்களைக் கொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடுகின்றது. ஆனாலும், தொடர்ந்து இலங்கைக்குக் கடன் வழங்குவதில் இழுபறிகள் உண்டு என்பதைச் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதாவது இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட இந்தோ பசுபிக் பிராந்தியப் புவிசார் அரசியல் போட்டிகளே இதற்குப் பிரதான காரணம். இலங்கையின் கடன்களில் மூன்றில் இரண்டு பங்கு சீனா வழங்கிய கடன்களாகும்.

ஆனால் பொருளாதார நெருக்கடியின்போது சீனா கடன் வழங்கவில்லை. இந்தியா மாத்திரமே நான்கு பில்லியன்களை இலங்கைக்குக் கொடுத்தது.

இதன் பின்னணியிலேயே சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் ஒப்பந்தம் ஒன்றைச் இலங்கையோடு செய்தது. சீனா – இந்தியா ஆகிய நாடுகளுடன் பேரம்பேசி மேலும் கடன்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் அதற்கு இந்தியா அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது. அதுவும் இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தியா இந்த மறுப்பை வெளியிட்டிருக்கின்றது.

இப்பின்புலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானிடம் இருந்து அதிகளவு கடன் மற்றும் இலங்கைக்கான பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா – இந்தியா ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க அழைக்குமாறு ஜப்பான் அரசை ரணில் வற்புறுத்துவாரெனவும் வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.

கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்கள் ரணிலின் ஜப்பான் பயண நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக இருப்பதற்கு இந்திய நிலைப்பாடுதான் பிரதான காரணம் என்பது தெரிகின்றது.

வழங்கப்பட்ட நான்கு பில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக இலங்கைக்கு புதிய நிதி வழங்க இந்தியா திட்டமிடவில்லையென புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் இந்த நிலைப்பாடு இலங்கைக்கு ஏலவே தெரிந்திருந்திருக்கின்றது.

இலங்கைக்குக் கடன் வழங்குவது குறித்த இந்திய நிலைப்பாடு அமெரிக்காவுக்கும் தெரிந்தது ஒன்று.

ஏனெனில் இந்தோ – பசுபிக் விவகாரம் குறிப்பாக இலங்கை மீதான சீனாவின் கடன் ஆதிக்கத்தினால் இலங்கையை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்லலாம் என்ற அச்சமான சூழல் காரணமாகவே, முடிந்தவரை இலங்கைக்கான விட்டுக் கொடுப்புகளும், அவசியமான தருணத்தில் இறுக்கமான நிலைப்பாட்டையும்  அமெரிக்க – இந்திய அரசுகள் கையாளுகின்றன.

தொடர்ந்து கடன் வழங்க முடியாதென்ற இந்தியாவின் இறுக்கமான அறிவிப்பு, இலங்கையைத் தங்கள் பக்கம் இறங்கி வரவைப்பதற்கான உத்திதான். ஆனால் இலங்கையும் முடிந்தவரை இந்தியாவின் இறுக்கமான பிடிகளில் இருந்து விலகி அமெரிக்கா – சீனா மற்றும் ஜப்பான் என்ற முத்தரப்பு உதவிகளில் தங்கியிருக்கும் காய் நகர்த்தல்களை மிகப் பணிவாக முன்னெடுக்கின்றது.

இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் குறிப்பாக ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கையாளும் அணுகுமுறையோடுதான் அமெரிக்கா ஒத்துச் செல்கிறது. ஜப்பானும் அதற்கு விதிவிலக்கல்ல. 2002 சமாதானப் பேச்சு காலத்திலும் இந்த ஒழுங்குதான் இருந்தது.

2012 ஆம் ஆண்டில் இருந்து ஜெனிவாத் தீர்மானம்கூட இந்தியாவின் ஆலோசனையோடுதான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் முன்னெடுத்திருந்தன. ஆனால் தற்போது ரசிய – உக்ரெய்ன் போரினால் ஐரோப்பிய நாடுகளின் கொல்லைப் புறத்தில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இதனால் இம்முறை இலங்கை விவகாரத்தில் அமெரிக்க இந்திய அரசுகள் முன்வைக்கும் தீர்மானத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைமை உண்டு.

ஆகவே ரணில் விக்கிரமசிங்க நினைப்பது போன்று இந்தியாவைக் கடந்து அமெரிக்கா – சீனா மற்றும் ஜப்பான் என்ற முத்தரப்பு உதவிகளோடு இலங்கையின் பொருளாதார நலன்களை அடைவது இலகுவான காரியம் அல்ல.

நிதியுதவிகைளத் தொடர்ந்து வழங்க முடியாதென இந்தியா அறிவித்தாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கையின் விருப்பங்களை நிறைவேற்றும் திட்டங்களையும் இந்தியா ஜெனீவாவில் முன்னெடுக்கின்றது. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனக் கோருவது சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காத ஒன்று என்பதை புதுடில்லி அறியாமலில்லை.

அதேபோன்று 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியா சம்பிரதாயபூர்வமாகவே கோருகின்றது என்பதைச் சிங்கள ஆட்சியாளர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

13 தமிழர்களுக்குப் பிடிக்காது என்று தெரிந்தாலும், அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சமாளிக்கும் நோக்கிலேயே அரசியல் தீர்வாக 13 ஐ இந்தியா ஜெனீவாவில் முன்வைக்கின்றது என்பதும் கண்கூடு.

ஏனெனில் போர்க்குற்ற விசாரணைக்குச் சர்வதேச சிறப்பு விசாரணைக்குழு அல்லது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்தினால், அது இந்தியாவுக்கும் ஆபத்தாக இருக்கும் என்ற கருத்து புதுடில்லியிடம் 2009 இல் இருந்தே உண்டு.

அதன் காரணமாகவே 13 ஐ அரசியல் தீர்வாகக் காண்பித்து அதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளையும் இணங்கவைத்தால், போர்க்குற்ற விசாரணை மற்றும் சில புலம்பெயர் அமைப்புகள் கோருகின்ற இன அழிப்புக்கான நீதி விசாரணை போன்றவற்றைத் தடுக்க முடியுமென இந்தியா நம்புகின்றது.

இதன் காரணமாகவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை 2009 இற்குப் பின்னரான சூழலில் குறிப்பாக  2012 ஆம் ஆண்டில் இருந்து ஜெனீவாவில் இந்தியா வற்புறுத்தி வருகின்றது. அமெரிக்காவுக்கும் இந்த நிலைப்பாட்டை இந்தியா சொல்லி வைத்துள்ளது.

ஆனால் இங்கே சிங்கள ஆட்சியாளர்கள. 13 பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருப்பதுதான் இந்தியாவுக்குக் கவலை. இதன் பின்னணியோடுதான் அதிகளவு நிதியுதவிகள் வழங்கப்பட்டமையும், பின்னர் அந்த உதவிகளை நிறுத்துவதாக அச்சுறுத்தும் அறிவிப்புக்களையும் இந்தியா கன கச்சதிமாகக் கையாண்டு வருகின்றது.

இந்த ஒரு நிலையிலேதான் ஜெனீவா மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டதிட்டங்களின் படி சர்வதேச தரத்திலான விசாரணைக்கு ஏற்றவாறு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளை வலுப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க – இந்திய ஒத்துழைப்புடன் பிரித்தானியாவால் தயாரிக்கப்பட்டு வரும் தீர்மானத்தின் பிரதிகள், தற்போது இலங்கை விவகாரம் தொடர்பான கருக்குழு நாடுகளிடம் கையளிக்கப்பட்டுப் பரிசீலிக்கப்படுகின்றன.

விசாரணையின்போது சர்வதேசத் தொழில்நுட்ப உதவிகளுக்குரிய ஒத்துழைப்புகளைப் பெற வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆறு பக்கங்களில் குறித்த தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (International Criminal Court-ICC) இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கட்சிகள் கோரியிருந்தன.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்றும், இன அழிப்புத் தொடர்பாக சர்வதேசச் சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென வடக்குக் கிழக்குத் தமிழ்த்தரப்புகளும் சில  புலம்பெயர் அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கும், அமெரிக்க – இந்திய அரசுகளுக்கும் விசுவாசமாகச் செயற்பட்டு வரும் தமிழ்த்தேசியக் கட்சிகள் கோரியுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணையைக்கூட ஜெனீவா மனித உரிமைச் சபை பரிந்துரைக்கத் தவறியுள்ளது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளர் வெளியிட்ட ஆரம்ப அறிக்கையில் இலங்கையைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டுமென உறுப்பு நாடுகளிடம் கேட்டிருந்தார்.

ஆகவே இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெறுகின்ற அமர்வில் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்குரிய பரிந்துரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் மூலம், இலங்கை தொடர்பான வல்லரசு நாடுகளின் புவிசார் அரசியல் போட்டித் தன்மைகள் வெளிப்படுகின்றன.

ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியை மையமாகக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அமெரிக்க – இந்திய அரசுகள் மூலமாக ஜெனீவாவில் கால அவகாசத்தைக் கோரியிருந்ததாகவும், இதனாலேயே 2024 ஆம் ஆண்டுவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிய முடிகின்றது.

ஆகவே புவிசார் அரசியல் நோக்கில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலான வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலையும் இன அழிப்பு, போர்க்குற்றத்துக்கான சர்வதேச நீதியும் மறுதலிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனி நாடு என்ற அங்கீகாரத்தைப் பாலஸ்தீன மக்களுக்கு வழங்க மறுக்கும் அநீதியும், ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படும் சர்வதேச நீதியும் ஒரே தராசில் சீர்துக்கிப் பார்க்கப்பட வேண்டிய தருணம் இது.