செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது இது உகந்த தருணம் அல்ல: தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர்

தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து தங்கிவரும் நிலையில் இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு உகந்த தருணம் இன்னும் ஏற்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில், “இலங்கைத் தமிழ் அகதிகள் விருப்பத்தின் அடிப்படையில் நாடு திரும்புவது குறித்து, இருதரப்பு பேச்சு வார்த்தைகளைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், இன நல்லிணக்கம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும், தற்போது அங்கு நிலவிவரும் பயம் மற்றும் மிரட்டல் நிறைந்த சூழல்; தமிழர் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து தங்கிவரும் நிலை; உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் இன்னும் மறுகுடியமர்த்தப்படாதிருப்பது;

புதிய இலங்கை அரசால் திட்டவட்டமான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படாதது போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து விவாதிப்பதற்கான கூட்டத்தை நடத்துவதற்கு உகந்த தருணம் இன்னும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது. அதனால், இத்தகைய கூட்டம் தள்ளிவைக்கப்பட வேண்டும் என இந்த அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள் அமைதியான, நியாயமான முறையில் உரிய மரியாதையுடன் மறுகுடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதிகொண்டுள்ளது. அகதிகள் தாயகம் திரும்புவதற்கான உகந்த சூழலை உருவாக்கத் தேவையான, போதிய பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுபான்மைத் தமிழர்களின் சுயாட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் முழுமையாக மீட்கப்பட்டு உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு வாழும் அகதிகள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே இந்த அரசின் கருத்தாகும்” என்று கூறினார்.