செய்திகள்

இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவதா? டில்லியில் நாளை முக்கிய பேச்சு!

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை, இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது குறித்து இந்தியத் தலைநகரில் இரு நாட்டு உயரதிகாரிகள் நாளை வெள்ளிக்கிழமை கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதற்காக கொழும்பில் இருந்து இலங்கை வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் குழுவினர் இன்று  வியாழக்கிழமை புதுடில்லி செல்கின்றார்கள். டில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் இக்கூட்டத்தில், இந்தியத் தரப்புக்கு இலங்கை விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய இணைச் செயலர் சுசித்ரா துரை தலைமை தாங்குவார் என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை உயரதிகாரி கூறியதாவது:

“இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை அவர்களது தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது குறித்து விவாதிப்பதற்காக டில்லியில் முதல் முறையாக அதிகாரிகள் நிலையிலான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

ஒரு நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்குத் திரும்ப கட்டாயப்படுத்த முடியாது. எனினும், சுய விருப்பத்துடன் தாயகம் திரும்பும் அகதிகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. அந்த அடிப்படையில்தான், சுய விருப்பத்தின் பேரில் தாயகம் திரும்ப உத்தேசிக்கும் அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து வெள்ளிக்கிழமை இரு நாட்டு அதிகாரிகளும் விவாதிக்கவுள்ளனர். இதில் தமிழக அரசு சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்றார் அவர்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இலங்கையில் பதவியேற்றுக்கொண்ட பின்னர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் திரும்பிவர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது. இதற்கமையவே தமிழகத்திலுள்ள அகதிகளைத் திருபட்பி அனுப்புவது குறித்து முதலில் ஆராயப்படவுள்ளது.