செய்திகள்

இலங்கைப் பயணத்தில் மோடி யாழ்ப்பாணத்துக்கும் செல்வார்

இலங்கை பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாகப் அண்மையில் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனா இம்மாதம் 16ம் தேதி இந்தியா செல்கிறார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாகாணத்திற்கு அவர் செல்வார் என்று தெரிகிறது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அவர், அங்கு இந்தியா மேற்கொண்டுள்ள உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை பார்வையிடுகிறார்.

தமிழர்களுக்கு இந்தியா சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டப் பணிகளையும் அவர் பார்வையிடுகிறார். அதுதவிர, தமிழக மீனவர் விவகாரம், 13வது அரசியல் சட்டத் திருத்தம் போன்றவை குறித்து இலங்கை அரசுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.