செய்திகள்

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்கப்போவதாக தமிழக முதல்வர் மீண்டும் சூளுரை

உச்ச நீதிமன்ற உத்தரவுடன் கச்சத்தீவை மீட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசியபோதே தமிழக முதலமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

1991 ஆம் ஆண்டு தாம் முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் கச்சத்தீவை மீட்பதற்காக மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ஜெயலலிதா இதன்போது கூறியுள்ளார்.

தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தாலும், அவர்களின் படகுகளை மீளக் கையளிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவை மத்திய அரசாங்கம் இலங்கைக்குத் தாரைவார்க்க முடிவு செய்தபோது அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி, வாய்மூடி மௌனியாக இருந்தார் என்றும் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்து இடைக்கால தடையுத்தரவைப் பெற்றிருந்தால், கச்சத்தீவு இலங்கை வசம் சென்றிருக்காது எனவும் உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் கச்சத்தீவைப் பெற்று பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது தவிர, கச்சத்தீவை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் தாம் தாக்கல்செய்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டுமென அப்போதைய மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தமை குறித்தும் கருணாநிதி பதிலளிக்க வேண்டும் என ஜெயலலிதா மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எவ்வித பங்குமில்லை என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்

தமது கட்சியின் சார்பாக தேர்தல் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் நேற்று பிரசாரத்தை ஆரம்பித்து உரை நிகழ்த்தியபோதே ஸ்டாலின் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார்.

கச்சத்தீவு தேசிய அளவிலான ஒரு பிரச்சினை எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அது கைமாறவில்லை என்றும், நெருக்கடிக் காலத்திலேயே இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நேரத்தில் இடம்பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அது முதல் கச்சத்தீவை மீட்க வேண்டும் என தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

n10