செய்திகள்

இலங்கையின் இயற்கை எழிலைக் கண்டு நான் பிரமித்துப் போய்விட்டேன்! நடிகர் ஆர்.ராதாரவி பேச்சு (படங்கள்)

இலங்கையின் இயற்கை எழிலைக் கண்டு நான் பிரமித்துப் போய்விட்டேன் அதிலும் குறிப்பாக நுவரெலியாவையும் அதன் சூழலையும் பார்க்கின்ற பொழுது இங்கு சினிமாவிற்கு நிரந்தரமாக வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தினால் வேலைவாய்ப்பையும் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. மிக விரைவில் அவ்வாறான ஒரு வேலைத்திட்டத்துடன் இங்கு வருவேன் என தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தமிழக நடிகர் சங்க செயலாளருமான ராதாரவி தெரிவித்துள்ளார்.

ஜங்கரன் மீடியா சொலியுசன் ஏற்பாட்டில் தென்னிந்திய திரைப்பட நடிகரும் தமிழ் நாட்டின் நடிகர் சங்க செயலாளருமான ஆர்.ராதாரவி இலங்கைக்கு அண்மையில் வருகை தந்திருந்தார். இதன்போது ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராதாரவிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, ஜங்கரன் மீடியா சொலியுசன் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கார்த்திக்கும் இராஜாங்க அமைச்சரும் நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய நடிகர் ராதாரவி,

நான் இதற்கு முன்பு இரண்டு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தேன். ஒரு முறை என்னை விமான நிலையத்துடன் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

அதாவது நான் ஒரு வெளிநாட்டு பொதியைப் போல நாட்டிற்குள் வராமல் விமான நிலையத்துடன் திரும்பிச் சென்றேன். அதற்கு பிறகு இந்த முறை நான் வந்திருக்கின்றேன்.

நான் நுவரெலியாவிற்கு சென்றிருந்த பொழுது இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லக்கூடிய எமது மக்களையும் சந்தித்தேன். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழந்து கொண்டிருப்பதையும் நான் அறிந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரையில் நான் அரசியல் பேச விரும்பவில்லை.

அதேபோல இங்கிருக்கின்ற மற்ற சமூகங்களையும் குறை கூற விரும்பவில்லை. ஏனென்றால் தற்பொழுது ஒரு சுமூகமான் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது நாங்கள் அதனை குழப்பக் கூடாது. ஆனால் ஒரு விடயம் மாத்திரம் எனக்கு தெளிவாக தெரிகின்றது. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பல விடயங்களை சாதிக்க முடியும். அதனை இங்குள்ள அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

நான் இங்கு வந்து பார்த்தவுடன் சில சினிமா சம்பந்தமான விடயங்களை முன்னெடுக்கலாம் என நினைக்கின்றேன். அதற்கு இலங்கை அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நான் மிக விரைவில் அவ்வாறான ஒரு திட்டத்துடன் வருவதற்கு உத்தேசித்துள்ளேன்.

அதன்போது இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அதற்காக முழு ஒத்துழைப்பையும் வழங்க உங்களுடைய கல்வி இராஜாங்க அமைச்சர் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார். அவர் மிகவும் எழிமையான மக்கள் மீது ஆர்வத்துடன் செயற்படக்கூடியவர் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

இலங்கையைப் பற்றி இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஒரு சிலர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். நான் அங்கு சென்றவுடன் இங்குள்ள உண்மையான நிலைமை என்ன என்பது பற்றி அவர்களுக்கு தெளிவு படுத்தவுள்ளேன். எதிர்காலத்தில் இலங்கையில் பல திரைப்படங்களை முழு அளவில் எடுப்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ratha ravi (5)

Ratha ravi (4)

Ratha ravi (3)

Ratha ravi (2)

Ratha ravi (1)