செய்திகள்

இலங்கையின் கொலைக்களங்கள்: சிங்கள மொழியாக்கம் பிரித்தானியாவில் இன்று

போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், ‘போர் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்க காணொளி இன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் திரையிடப்படவுள்ளது.

பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் பேச்சுக்களை நடத்தவுள்ள நிலையிலும், நாளை பிரித்தானிய மகாராணி ஏற்பாடு செய்துள்ள இராப்பாசன விருந்திலும் பங்கேற்கவுள்ள நிலையிலும் இந்தக் காணொளி வெளியிடப்படவுள்ளது.

இதனால் இலங்கை – பிரித்தானியா இடையிலான உறவுகளில் சர்ச்சைகள் ஏற்படலாம் என்று இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் காட்சி அறை ஒன்றில் திரையிடப்படவுள்ள இந்த ஆவணப்படத்தின் ஆங்கில மூலம் 2011ம் ஆண்டு சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்சிகள் வெளியான போது, உலகெங்கும் பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

இதன் சிங்கள மொழியாக்க காணொளியே இன்று வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ‘போர் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தை இயக்கிய கலம் மக்ரே, ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் சிங்கள ஊடகவியலாளர் பாசண அபேவர்த்தனவும் இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளார்.