செய்திகள்

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தொடர்ந்து சந்திப்பு

இலங்கையின் புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க, அமெரிக்கா இந்தியா, அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களை தனித்தனியாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. புதிய பாதுகாப்புச் செயலாளராக பஸ்நாயக்க பதவியேற்ற பின்னர் வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தொடர்ந்து சந்திப்புக்களை ஏற்படுத்தி வருகின்றார்.

அவுஸ்திரேலியா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஜாசன் சீயர்ஸ், பங்களாதேஷ் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் ஸா அஸ்லாம் பர்வேஸ், சீனத் தூதரகத்தில் உள்ள இராணுவ, கடற்படை, வான்படை, ஆலோசகர் மூத்த கேணல் லீ செங்லின், இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலன், ஜப்பானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகரும் அரசியல் விவகாரச் செயலாருமான கப்டன் மோரோட் சுகு சிகேகாவா, பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முகமட் ரஜில் இர்ஸாட் கான், அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரொபேர்ட் நொக்ஸ் ரொஸ் ஆகியோரே இலங்கை பாதுகாப்புச் செயலருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.