செய்திகள்

இலங்கையின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கையின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் நாட்டப்பட்டது.

கெரவலப்பிட்டியவில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமையவுள்ளதுடன், இதன் முதற்கட்ட நிர்மானப் பணிகள் 21 மாதங்களில் நிறைவடையவுள்ளது.

இதனூடாக தேசிய மின் கட்டமைப்பில் 350 மெகாவொட் மின்சாரத்தை இணைக்கப்படவுள்ளது. இதன்போது உற்பத்தி செய்யப்படும் 220 மெகாவொட் மின்சாரம் மற்றும் 12 மாதங்களில் நிறைவுசெய்யப்படவுள்ள இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் 130 மெகாவொட் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து பிரதமர் உரையாற்றினார்.

உலகின் உயரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்று நிர்மாணிக்கப்படுவது 350 மெகாவொட் திறன் கொண்ட திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமாகும்.

இலங்கையில் மின்சக்தியை உருவாக்க நாங்கள் எப்போதும் புதிய வழிமுறைகளை பின்பற்றியுள்ளோம். முதலாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், முதலாவது வெப்ப மின் நிலையம், முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம், சமீபத்தில் முதலாவது திண்மக்கழிவு மின் உற்பத்தி நிலையத்தையும் திறந்தோம்.

இன்று, இந்த மின் உற்பத்தி நிலையம் இலங்கையில் முதலாவது திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையமாக ஆரம்பிக்கப்படுகிறது. நாம் பேச்சில் அன்றி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலேயே முதன்மையாக விளங்குகிறோம். எமது அரசாங்கமும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவே பழகியுள்ளது. அதுவே நமக்கு சக்தியைத் தருகிறது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது கட்டம் 21 மாதங்களுள் நிறைவுசெய்யப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. முதல் கட்டத்தின் ஊடாக 220 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இலவச கல்வியால் ஊக்குவிக்கப்பட்ட சிறந்த உள்ளூர் பொறியியலாளர்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு முழு பொறுப்பையும் வழங்குவதன் மூலம் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும். இரண்டாவது கட்டம் ஓராண்டிற்குள் நிறைவுசெய்யப்படும். இரண்டாவது கட்டத்தின் ஊடாக 130 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் மின்சக்தி தேவையை முழுமையாக வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

இன்று கெரவலபிட்டியவில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக நாட்டில் நிலவும் மின்சாரத்திற்கான கேள்வியில் 13 சதவீதம் பூர்த்திசெய்யப்படும். இதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதாகும். நாம் அபிவிருத்தியின் போது முக்கிய தேவைகளை அடையாளம் காண்பது அவசியமாகும்.அவ்வாறன்றி ஒவ்வொருவரது தனிப்பட்ட தேவைக்கேற்ப தேசிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது.

நாம் இதுவரை நாட்டில் 99.8 சதவீதமானோருக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளோம். இன்னும் சுமார் 84000 பேர் வரையிலானோரே எஞ்சியுள்ளனர். நாம் இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டில் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை 100 சதவீதமாக பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். -(3)