செய்திகள்

இலங்கையின் 44வது பிரதம நீதியரசராகும் ஸ்ரீபவனின் வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசாக கனகசபாபதி ஜே ஸ்ரீபவன் நியமிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் பிரதி சட்ட மா அதிபராகவும் பதில் பிரதம நீதியரசரகவும் பணியாற்றியுள்ள நீதியரசர் ஸ்ரீபவன் உச்ச நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றி வந்தார்.

29 ஆம் திகதி மாசி மாதம் 1952 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இவரது தந்தை நடராஜா கனகசபாபதி காங்கேசன்துறை சீமெந்து தொளிற்சாலையின் ஒரு ஊழியராவார். 1962 முதல் 1972 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவர் தனது பாடசாலைக் கல்வியை பயின்றார். பின்னர் 1974 இல் இலங்கை சட்டக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரனியாக 1976 ஆம் ஆண்டு வெளியேறினார். இவர் தனது இடைநிலைப் பரீட்சையில் 1 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

1977 முதல் 1996 வரை சட்டத்தரணியாக பணியாற்றிய ஸ்ரீபவன் 1978 இல் இலங்கையின் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச வழக்குரைஞராக இணைந்தார். மார்ச் 1989 இல் அவர் நிரந்தர அரச வழக்குரைஞராக நியமனம் பெற்றார். பின்னர் அதே ஆண்டில் அவர் சிரேஷ்ட அரச வழக்குரைஞராக பதவி உயர்வு பெற்றார்.

22 பெப்ரவரி 1996 இல் பிரதி சட்ட மா அதிபராக அவர் நியமனம் பெற்றார். அதன் பின்னர் மேன் முறையீட்டு பிரிவின் தலைவராக பணியாற்றி சட்ட மூலங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மனுக்கள் உட்பட பல உச்ச நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் பணியாற்றினார். பணியாற்றிய அதேசமயம் அவர் தனது படிப்புக்களையும் தொடர்ந்தார். 1992 இல் தொழில்சார் சட்டத்தில் தனது டிப்புளோமா பட்டத்தை கொழும்பு பல்கலைக்கககத்திலும் பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டு முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

மே 2002 இல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2007 இல் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராகவும் பின்னர் 2008 இல் உச்ச நீதிமன்ற நீதியரசராகவும் நியமிக்கப்பட்டார்.