செய்திகள்

இலங்கையில் அதிகரித்த வெப்பத்துடன் கூடிய காலநிலை நீடிக்கலாம்

இலங்கையில் தற்போது நிலவும் அதிகரித்த வெப்பத்துடன் கூடிய காலநிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீ்டிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகின்றது.

பகல் வேளைகளிலும், இரவு நேரங்களிலும் வழமையான அளவிற்கும் அதிகமாக வெப்பநிலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, நாட்டின் வெப்பநிலை வழமையை விட பகல் நேரத்தில் 3 டிகிரியாலும், இரவு நேரத்தில் 2 டிகரியாலும் அதிகரித்துக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையகப் பகுதிகளில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வருமான இழப்பினால், பெருமளவிலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் சிறுதோட்ட விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்த அதிகரித்த வெப்பநிலைக்கான காரணங்கள் பற்றி பிபிசி தமிழோசைக்கு விளக்கமளித்த இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி பிரதீபன், சூரிய நீள் வட்டப்பாதையில், சூரியனுக்கும் புவிக்குமிடையிலான தூரம் மிகவும் குறைந்திருப்பதனால் இம்மாதிரியான வெப்பநிலை மார்ச் மாதளமளவில் ஏற்படுவது வழமை என்று தெரிவித்தார்.

ஆனாலும், காடழித்தல் உட்பட மக்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்படும் அழிவுகள் காரணமாக, இதன் தாக்கம் தற்போது அதிகரித்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த காலநிலை ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவித்த பிரதீபன், பின்னர் காலநிலை வழமைக்கும் திரும்பும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

நாட்டில் தற்போது அவ்வப்போது மின் தடை ஏற்படும் இந்த சந்தர்ப்பத்தில், வெப்பநிலை அதிகரித்திருப்பது மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது.

வறண்ட காலநிலை தொடருமானால், பல மாதங்களுக்கு மின்சார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மலையகத்தில் ஹட்டனை அண்மித்த இரண்டு காட்டுப் பகுதிகளில் பரவிய தீ காரணமாக பெரும் காட்டுப் பிரதேசம் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

தீக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

n10