செய்திகள்

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டது; ஐ.நா அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்

மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை இலங்கையில் சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டதென்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றும் இலங்கையின் ஐ.நா சபை அங்கத்துவம் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளது என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கும் சர்வதேச தூதுவர் அலுவலகங்களுக்கும் அனுப்பிய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தண்டனைக் குற்றவாளி சார்ஜன்ட் சுனில் இரத்நாயகவிற்கு ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச அவர்களால் அளிக்கப்பட்டுள்ள மன்னிப்பும் விடுவிப்பும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரசுடன் எவ்விதத்திலும் தொடர்புடையதன்று. அது ஒரு அரசியல் சார்ந்த நடவடிக்கை. இந் நடவடிக்கையானது சர்வதேச நாடுகளுடன் இலங்கை செய்து கொண்ட பல உடன்பாடுகளின் படி அதற்கிருக்கும் கடப்பாடுகளை உதாசீனம் செய்து வருகின்றது என்பதை மட்டுமல்ல நீதித்துறை உள்ளடங்கிய சகல சமூகம்சார் அமைப்புக்களையும் அரசியல் ரீதியாக்கும் அதன் மனோநிலையையும் எடுத்துக் காட்டுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தபாய இராஜபக்ச அவர்கள் போரின் போது சிறையில் அடைபட்டிருந்த சகல சிறைக்கைதிகளையும் விடுதலை செய்து விடுவிப்பதாக பொறுப்பேற்றிருந்தார் என்று அம்னெஸ்டி இன்டர்நnஷனல் சுட்டிக் காட்டியுள்ளது. இல்லாத பொல்லாத காரணங்களைக் காட்டி தம் மக்களைப் பாதுகாத்து அதே நேரத்தில் பெரும்பான்மை சமூகத்தினரின் பெரும்பான்மை வாக்குகளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெற்றுக் கொள்ளவும் வழியமைத்துவருகின்றது இன்றைய அரசாங்கம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இப்பொழுதும் தக்க காரணங்கள் ஏதுமின்றி கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைத்து வருகின்றது இலங்கை அரசு. இந் நடவடிக்கைகள், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சார்ந்த உடன்படிக்கைகள் போன்றவற்றின் ஏற்பாடுகளுக்கு முற்றும் முரணானவை. எனவே இரத்நாயக்கவின் விடுவிப்பானது மனித நேயத்திற்கு முரணானது மட்டுமல்ல மனித குலத்தை வெறுப்பேற்றும் செயலுமாகும்.

இராஜபக்ச அரசாங்கத்தின் முன்னுரிமைகளாவன அதன் சர்வதேச கடப்பாடுகளுடன் முரண்படுபவையாகவே தென்படுகின்றன. இதிலிருந்து எம் நாட்டு மக்களிடையே சமரசம் உண்டாக்குவதோ இனங்களிடையே இருக்கும் மன அலைவை நீக்கி புரிந்துணர்வை ஏற்படுத்துவதோ இன்றைய அரசாங்கத்தின் ஒரு குறிக்கோளாகத் தென்படவில்லை. இதுவரையில் தனது சர்வதேச கடப்பாடுகளையும் ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளையும் உதாசீனப்படுத்தியே இலங்கை அரசாங்கம் வந்துள்ளது.

இலங்கையின் அண்மைய நடவடிக்கையும் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமையைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இணக்கப் பிரேரணையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டமையும் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு ஒரு பாரிய கடப்பாட்டை உண்டுபண்ணியுள்ளன. அதாவது இலங்கையின் ஐக்கிய நாட்டு தொடர் உறுப்புரிமை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே அந்தக் கடப்பாடு.

இரத்நாயக்காவின் மன்னிப்பும் விடுவிப்பும் எமது அதிகார மையத்தின் தரத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன. முறையாக விசாரித்து, விளங்கி, குற்றவாளியாகக் காணப்பட்ட அதாவது தமிழருக்கெதிரான இலங்கையின் யுத்த குற்றவாளிக்கெதிரான இலங்கை நீதிமன்றங்களின் தீர்ப்பைக் கூட நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதே அரசின் நோக்கம். இதை சர்வதேச சமூகம் கவனத்திற்கு எடுத்துள்ளது. அதன்படி இராஜபக்ச அரசாங்கத்துடன் உரியவாறு அது நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். வேண்டுமென்றே எடுக்கப்பட்ட ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காலம் காலமாகத் தமிழர்களுக்கு எதிராக இந்த நாட்டில் எடுக்கப்பட்டுவந்த நடவடிக்கைகளை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். 1956ல் காலி முகத்திடலில் நடைபெற்ற சம்பவங்கள், 1958ம் ஆண்டின் கலவரங்கள், அதன் பின்னர் நடாத்தப்பட்ட 1983ம் ஆண்டின் கலவரங்கள் உள்ளடங்கிய மனித இனப் படுகொலைகள் போன்றவற்றின் சூத்திரதாரிகளை நீதிமன்றின் முன் நிறுத்தாமலும் அல்லது நிறுத்தி குற்றவாளிகள் ஆக்கப்பட்ட போது அவர்கள் தண்டனை பெறாமல் தடுக்கப்பட்டமையும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு ஒத்ததாகவே இருந்து வந்துள்ளன.

தமிழ் மக்களின் சகிப்புத் தன்மை எல்லை கடந்துவிட்டது. அவர்களின் சிறு சிறு வெற்றிகள் கூட இன்று மாற்றியமைக்கப்படுகின்றன. எனவே போர்க்குற்றவாளிகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள், தமிழர்க்கு எதிராக இனப்படுகொலை செய்தவர்கள் அனைவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் அல்லது ஐக்கிய நாடுகளால் இலங்கைக்கு எதிராக வகுக்கப்படும் விசேட நீதிமன்றமொன்றின் முன்னிலையில் உடனே கொண்டுவரப்பட வேண்டிய காலம் இன்று கனிந்துள்ளது.