செய்திகள்

இலங்கையில் தமிழர்கள் நிலை சற்றும் மாறவில்லை: சென்னையில் விக்னேஸ்வரன்

போருக்குப் பின்னரும் இலங்கையில் தமிழர்கள் நிலை சற்றும் மாறவில்லை என வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வேதனை தெரிவித்தார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “போருக்குப் பின்னரும் இலங்கையில் தமிழர்கள் நிலை சற்றும் மாறவில்லை. இலங்கை வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒருபுறம் நடைபெறுகிறது.

அதேவேளையில், இன்னொருபுறம் இலங்கை அரசு ஆதரவுடன் ஆளுநர், முதன்மைச் செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் தலைமையில் முரண்பாடான மற்றொரு நிர்வாகமும் செயல்படுகிறது.

தெற்கில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து வடமாகாணத்தில் குடியேற்ற இலங்கை அரசு சகல நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. இதனால், தமிழர் நலனுக்காக நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தடைபடுகின்றன.

இலங்கை அரசியலமைப்பின் 13-வது சட்டத் திருத்தம், திருத்தப்பட்டாலும் அது எங்களுக்கு நன்மை அளிக்காது. அதில் பல்வேறு சிக்கல் நிலவுகிறது. தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பெற இந்திய அரசு தலையிட்டு உதவி செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து பேச விரும்பவில்லை என்றார். இருப்பினும் 1976-க்குப் பிறகு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்பதை மட்டும் அவர் சுட்டிக்காட்டினார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குடும்பத்தினர் தன்னை சந்தித்துப் பேசியதாகவும் கூறினார்.