செய்திகள்

இலங்கையில் நல்ல தலைவர்களுக்கான மார்ச் 12 இயக்கம்

இலங்கையில் நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்ச் 12 என்ற பெயரில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரகடனத்தை வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நாடெங்கிலும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் செயற்பாட்டை மார்ச் 12 இயக்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

கடந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்பாட்டின் தொடர்ச்சியாக ஞாயிறன்று வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

பவ்ரல் என்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு என்ற அமைப்பினால் இந்த மார்ச் 12 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயலுக்காக தண்டிக்கபட்டவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள், அதனைப் பிறர் பயன்படுத்துவதற்காகத் தூண்டுபவர்கள் போன்றவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடாது, பெண்கள், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத்தக்க வகையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட எட்டு விடயங்களை மார்ச் 12 இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
1-1
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்ற உறுதிமொழியை நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பெற்றிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

மார்ச் 12 இயக்கத்தின் நிபந்தனைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் ஆதரவைத் திரட்டவும் நாடெங்கிலும் 10 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அந்த இயக்கத்தின் முக்கியஸ்தர் செல்வராசா துஸ்யந்தன் தெரிவித்தார்.

இந்தக் கையெழுத்துக்கள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி கொழும்பில் அரசியல் கட்சித் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டு, தங்களது பிரகடனத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறினார்.