செய்திகள்

இலங்கையில் பொருளாதாரப் பேரிடர் பாதிப்புக்களை தமிழர்கள் வகுத்தறிதல்

மருத்துவர் சி. யமுனாநந்தா

தற்போது இலங்கையில் நிகழும் பொருளாதாரப் பேரிடர்களை பாதகமின்றி எதிர்கொள்வதற்கு ஈழத்தமிழர்கள் அதன் வியாபகத்தினை வகுத்து அறிதல் இன்றியமையாதது. இப் பாதிப்புக்களை பின்வரும் வகைப்படுத்தல் ஊடாக அறியலாம்.

1) அன்றாடப் பிரச்சினைகள்
2) சமூகப் பிரச்சினைகள்
3) மருத்துவப் பிரச்சினைகள்
4) வர்த்தகப் பிரச்சினைகள்
5) அரசியல் பிரச்சினைகள்
6) இராணுவப் பிரச்சினைகள்
7) மனித உரிமைப் பிரச்சினைகள்
8) பூகோள அரசியல் பிரச்சினைகள்

1. அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள்
அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் மக்களுக்கு பொருட்களின் விலையேற்றம், சம்பளம் பற்றாக்குறை, கடன் அதிகரித்தல் என்பன அமைகின்றன. வீடுகளில் 3 வேளை உணவு கிடைத்தல் அரிதாதல், 2 வேளை உணவு கிடைத்தல் அரிதாதல், ஒரு வேளை உணவு கிடைத்தல் அரிதாதல் என பசியும் பட்டினியும் அதிகரிக்கும் தன்மை காணப்படுகின்றது. போசாக்குள்ள உணவு, பால் என்பன கிடைத்தல் அரிதாகின்றது. அன்றாட சமையலுக்குத் தேவையான விறகு, எரிபொருள் கிடைத்தல் அரிதாகின்றது. போக்குவரத்துச் செலவீனம் அதிகரிக்கின்றது. பாடசாலை மாணவர்கள் உணவுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவதுடன் பாடசாலை இடைவிலகல்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது. மேலும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு மேலதிக கல்வியூட்டச் சிரமப்படுகின்றனர். பொருட்களின் விலையேற்றம், மருந்துகளின் விலையேற்றம் என்பன நோய்களுக்கான சிகிச்சைச் செலவீனங்களை அதிகரித்துள்ளது. நீர்க்கட்டண அதிகரிப்பு, மின்சார கட்டண அதிகரிப்பு, தொலைபேசிக் கட்டண அதிகரிப்பு என இன்னோரன்ன கட்டண அதிகரிப்புக்களும் ஒவ்வொரு குடும்பத்தினையும் பாதிக்கின்றன. அடுத்து அன்றாட வேலை செய்வதற்கான வேலை வாய்ப்புக் குன்றுகின்றது.

இத்தகைய வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ள குடும்ப மட்டத்தில் நம்பிக்கையினை உருவாக்க வேண்டும். தேசிய மட்டத்தில் நம்பிக்கையினை உருவாக்க வேண்டும். இதற்கு பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் உற்பத்தி சார்ந்த வேலைத்திட்டங்கள் அவசியம். கூட்டுறவு அமைப்புக்கள் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

2. சமூகப் பிரச்சினைகள்
சமூகப் பிரச்சினைகளாக குடும்ப வன்முறைகள், தற்கொலைகள், போதைப்பொருள் பாவனை என்பன பொருளாதார நெருக்கீட்டுடன் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூகத்தில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழில் முயற்சிகள் குறைவடைந்து காணப்படுகின்றன. பாடசாலை விலகல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. சிறுவர்கள் வேலைக்குச் செல்லும் நிலை உருவாகி உள்ளது. சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகும் வீதம் அதிகரித்துள்ளது. இலங்கையின் வடமாகாணம் தென்கிழக்காசியாவில் பிரதான போதை வியாபார மத்திய நிலையமாக மாறும் ஆபத்து உள்ளது. வேலைவாய்ப்பு இன்மை, பாடசாலை விலகல் போதை வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிலையினை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

ஆரம்பச் சுகாதாரச் செயற்பாடுகளில் உள்ள வசதியீனங்கள் டெங்கு நோய்த் தாக்கத்தினை அதிக அளவில் ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. மற்றும் மக்களின் மந்த போசணையும் தொற்று நோய்த் தாக்கத்தினை அதிகப்படுத்தும்.

3. மருத்துவப் பிரச்சினைகள்
மருத்துவப் பிரச்சினைகளை ஆராயும்போது மருந்துகளின் கட்டுப்பாடற்ற விலையேற்றம், அத்தியாவசியமான மருந்துகளிற்கும், மருத்துவ ஆய்வுகூட இரசாயனங்களுக்கும் தட்டுப்பாட்டினையும், சாதாரண மக்களால் அவற்றினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையினையும் ஏற்படுத்தி உள்ளது. பொருளாதாரச் சிரமங்களுக்கு பல மருத்துவ நிபுணர்களும், மருத்துவர்களும், துணை மருத்துவ உத்தியோகத்தர்களும் புலம்பெயரும் நிலைமை உருவாகி உள்ளது. இதனால் சுகாதார சேவை வழங்கல் மட்டுமல்ல சுகாதாhரக் கட்டமைப்பும் தளர்வடையும் ஆபத்து உள்ளது. நோய்நிலைகள் அதிகரித்தல், இறப்பு வீதம் அதிகரித்தல், பிறப்பு வீதம் குறைவடைதல் என்பனவும் தற்போதைய பொருளாதார தளம்பல் நிலையில் நீண்டநாள் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.

4. வர்த்தப் பிரச்சினைகள்
பொருட்களின் விலையேற்றம், பொருட்கள் பற்றாக்குறை வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்தியா அவசியப் பொருட்களின் விலையும் மலையேறியுள்ளது. பங்கீட்டு அடிப்படையில் அத்தியா அவசியப் பொருட்களை பகிர்ந்தளித்தல், மானியங்கள் வழங்குதல் வர்த்தகம்சார் பொருளாதார நெருக்கடியில் கையாள வேண்டிய நடவடிக்கைகளாகும். மேலும் முதலீடுகள் இன்மை, போக்குவரத்துச் செலவுகள் அசாதாரணமாக வர்த்தக நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது.

5. விவசாயப் பிரச்சினைகள்
விவசாய மேன்மை பட்டினிச் சாவினைத் தடுக்கும். தற்போதைய சூழலில் கமத்தொழில் விஸ்தரிப்பை வலுவூட்ட வேண்டும். விளைச்சல் தரும் நெல்லினங்களை பயிரிடல் வேண்டும். குரக்கன், சாமை, தினை சாகுபடியில் ஈடுபட வேண்டும். மரவள்ளி செய்கையை ஊக்குவிக்க வேண்டும். விவசாயச் சங்கங்கள், கூட்டுப் பண்ணைகள் என்பன உருவாக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரம், கிருமிநாசினி, விதைநெல் மற்றும் விவசாய தோட்ட உள்ளீடுகள் அளிக்கப்படல் வேண்டும். விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் இலக்கு பேணப்படல் வேண்டும். விளைபொருட்களை உரிய விலைகளில் சந்தைப்படுத்தல் வேண்டும். கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு என்பன ஊக்குவிக்கப்படல் வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரச உத்தியோகத்தர்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்துக் காத்து இராது சாதாரண மக்கள் போல் விவசாயம், பண்ணைகள் என்பவற்றையும் மேற்கொள்ளல் வேண்டும். மேலும் சிறு கைத்தொழில்கள், ஆடைத் தொழில், மீன் பிடித்தல் போன்றவைகளும் கிராமக் கட்டமைப்புக்கள் மூலம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். மேலும் ஆடம்பரச் செலவுகள், கேளிக்கைக் கொண்டாட்டங்கள் என்பவற்றை தவிர்த்து உணவு உற்பத்தியில் முதலீடு செய்தல் மிகவும் அவசியமானதாகும்.


6. அரசியல்; பிரச்சினைகள்
பொருளாதார நெருக்கீட்டினால் அரசியல் பிரச்சினைகள் உருவாகலாம். அரசியல் பிரச்சினைகளால் பொருளாதார நெருக்கீடுகள் அதிகரிக்கலாம். இது ஒரு விசச் சக்கரம் போல் தொடரும். இலங்கையின் பொருளாதாரப் பேரிடருக்கு, இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமையும் பிரதான காரணமாகும். குறிப்பாக இலங்கை அரசு தமிழர்களை அடக்குவதற்காக பெருமளவான இராணுவ செலவீனங்களைத் தொடர்ந்து செய்து கொண்டுள்ளது. வடகிழக்குப் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு வாதம் பாரிய பொருளாதார ந~;டத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இனவாதம், மதவாதம் என்பவற்றை பிரயோகித்து இராணுவ பிரசன்னத்தை உறுதிப்படுத்துவது பொருளாதார மீட்சிக்கு உதவாது. மாறாக வன்முறை அரசியலும், நிலையற்ற அரசியலுமே ஏற்படும். தற்போதைய அரசியல் சூழல் அவ்வாறே உள்ளது. தற்போதைய சூழலில் இலங்கை தமிழர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான சுயாட்சியினை அளித்து தனது இராணுவச் செலவீனத்தை 90மூ இனால் குறைக்கலாம்.

7. இராணுவப் பிரச்சினைகள்
இலங்கை அரசிடம் மிகப் பெரிய இராணுவ ஆளணி உள்ளது. ஆனால் அதனை இயக்குவதற்குத் தேவையான மொத்தத் தேசிய உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதனால் சாதாரண தொழிலாளிகள் செய்யும் தொழில்களிற்கும் அதிகாரிகளின் இடத்திற்கும் இராணுவ ஆளணியினைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது. பொருளாதார நெருக்கடி நிலையில் இராணுவ ஆளணி கட்டுப்படுத்தப்படாவிடில் சமூகத்தில் கட்டம் கட்டமான வன்முறைகள் அதிகமாகும். மேலும் சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவர். இதனை அண்மைக் காலங்களில் எரிபொருள் வழங்கலில்; காணலுற்றோம். இராணுவ ஆளணியினை மட்டுப்படுத்த சர்வதேச ஆலோசனை இலங்கை அரசுக்கு தேவை.

8. மனித உரிமைகள் பிரச்சினைகள்
பொருளாதார நெருக்கடி நிலையில் அடிப்படை மனித உரிமை மீறல்கள் பல இடங்களில் அவதானிக்கலாம். மருத்துவ வசதி, உணவு வசதி, வதிவிட வசதி உட்பட வாழ்வதற்கான உரிமைகள் பேணப்படல் வேண்டும். அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான வரிசைகளில் கலவரங்கள் உருவாதல், மக்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது. இவற்றின்போது மனித உரிiமை மீறல்கள் ஏற்படும் சாத்தியம் பலவாகும். அண்மையில் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய போராட்டங்களை அடக்குவதற்கு மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதார சீர்குலைவில் சட்டம், நீதி, மனித உரிமை என்பனவும் சீர்குலைவது இயல்பேயாகும். எனவே பொருளதாதார ஸ்திரநிலை சட்டம், நீதி, மனித உரிமை என்பவற்றை பேண உதவும். நாட்டின் பொருளாதாரம் தாழ்வடைந்தால் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும்.

9. பூகோள அரசியல் பிரச்சினைகள்
பொருளாதார நெருக்கீடுகளுக்கு பூகோள அரசியல் பிரச்சினைகளும் பிரதான காரணங்களாக அமைகின்றன. உதாரணமாக எரிபொருள் கப்பல் தாமதித்து வரும்போது ஏற்பட்ட குழப்பநிலை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. இலங்கையில் முதலீடு செய்கின்ற சீனா, இந்தியா, மேற்குலக நாடுகளுக்கு இடையிலான போட்டித்தன்மை இலங்கையின் பொருளாதாரத் தாழ்நிலையில் அதிக முதலீடுகளை எதிர்பார்த்து நாட்டின் சுயாதீனத்தை இழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசு சீன அரசின் முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் இலங்கையின் தமிழர் பகுதிகள் இந்தியாவின் நேரடிக் கண்காணிப்பிற்குள் வருவது தவிர்க்க முடியாததாகிவிடும். தற்போதைய பொருளாதாரப் பேரிடர் இலங்கையில் சர்வதேச போட்டி நிலையினை ஏற்படுத்தாது இருத்தல் அவசியம். அன்றேல் அப்போட்டி நிலையானது இலங்கையில் இனரீதியான பிரிவினையினை நிரந்தரமாக ஏற்படுத்தி விடும்.

எனவே ஈழத்தமிழர்கள் இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் பேரிடர் வகைநிலைகளை அறிந்து அறிவாந்த நிலையில் செயற்படல் வேண்டும்.