செய்திகள்

இலங்கையுடனான உறவு தொடர்ந்தால் எம்முடனான உறவு முறியும்: மோடிக்கு வைகோ எச்சரிக்கை

இலங்கை அரசுடன் மத்திய அரசின் உறவு தொடர்ந்தால், எங்களு டனான உறவு அறுந்துபோகும் நிலை ஏற்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ள இலங்கை அரசை கண்டித்தும், பால் விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் விசித்திர ஆட்சி நடக்கிறது. 2 முதல்வர்கள் உள்ளனர். இருவரும் சிறையில் தான் இருக்கின்றனர். சிறை தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் முதல்வர் ஜெயலலிதா, பிணை யில் விடுதலை செய்யப்பட்டுள் ளார். இன்னொருவரான ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் முன்னிலையில் முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு சிறையில்தான் இருக்கிறார். ஜெயலலிதா மக்கள் முதல்வர் என்றால், ஓ.பன்னீர் செல்வம் என்ன முதல்வர் என புரியவில்லை.

பன்னீர்செல்வம் தலையில் பழி விழட்டும் என கருதி பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மிஷினில் பணத்தை எண்ணும் உங்களுக்கு வேண்டுமானால் 10 ரூபாய் என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், ஏழைகளுக்கு அது பெரிய விஷயம். பாலில் தண்ணீர் கலப்பதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தண்ணீரில் பாலை கலந்தவர்கள் அதிமுகவினர். அதன்மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியின்போது சோனியா கொடுத்த ஊக்கத்தால் தான் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல இப்போதுள்ள மத்திய ஆட்சி கொடுக்கும் ஊக்கத்தால், அப்பாவித் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனையை இலங்கை அரசு விதித்துள்ளது. இலங்கை அரசுடன், நரேந்திர மோடி அரசின் உறவு தொடர்ந் தால், எங்களுடனான உறவு அறுந்துபோகும் நிலை ஏற்படும்.

தமிழகத்தில் மக்கள் பிரச்சினை களுக்காக தொடர்ந்து போராட்டங் கள் நடத்தப்படும். மதிக்க வேண்டியவர்களை மதிப்போம். அதேநேரத்தில் எதிர்க்க வேண்டி யவர்களை எதிர்ப்போம். அது நரேந்திர மோடியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி. எங்களுக்கு கவலை இல்லை.

இவ்வாறு வைகோ பேசினார்.