செய்திகள்

இலங்கையுடனான ரி-20 தொடரை கைபற்றியது இந்தியா!

இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றியை பதிவுசெய்திருந்தது.

இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாகவே ஆரம்பித்திருந்தது.

இதன்படி, நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன், சுப்மான் கில் களமிறங்கினார்.

கடந்தப் போட்டிகளைப் போல முதல் விக்கெட்டுக்காக இந்தியாவை வேகமாக துடுப்பெடுத்தாட இலங்கையின் பந்து வீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.

இந்திய அணியின் முதல் விக்கெட்டை 11 ஓட்டங்களில் இழந்தது, 14 ஓட்டங்களை எட்டியபோது, ​​​​இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இருப்பினும், இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஆறாவாது விக்கெட்டுக்காக 54 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 137 ஓட்டங்களை குவித்திருந்தது. ஷுப்மான் கில்லுடன் இணைந்த ரியான் பராக் 54 ஓட்டங்களை குவித்தனர்.

இந்திய அணி சார்பில் ஷுப்மான் கில் அதிகபட்சமாக 39 ஓட்டங்களை குவித்திருந்தார். இலங்கை அணி சார்பில் மஹிஷ் தீக்ஷன 28 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

138 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் நிதான துடுப்பாட்டத்தின் உதவியுடன் வலுவான நிலையில் இருந்தனர்.

எனினும், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் காரணமாக இந்தப் போட்டியிலும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

முதல் விக்கெட்டுக்கு குசல் மெண்டிஸ் மற்றும் பத்தும் நிஸ்ஸங்க இடையே 58 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

பத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்த பிறகு, குசால் ஜனித் பெரேராவுடன் இணைந்தார், மேலும் மெண்டிஸ் இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

குசல் ஜனித் பெரேரா 46 ஓட்டங்களையும்,குசல் மெண்டிஸ் 43 ஓட்டங்களையும் எடுத்த நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களை ஆட்டமிழக்கச் செய்திருந்தனர்.

அதன் பின்னர் இலங்கை அணியின் நான்காவது விக்கெட்டில் இருந்து கடைசி விக்கெட் வரை 06 விக்கெட்டுகளும் வெறும் 27 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் மைதானத்திற்கு வந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலங்கை அணி வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தால் ஏமாற்றமே கிடைத்தது.

இலங்கை அணிக்கு கடைசி ஆறு பந்துகளில் ஆறு ஓட்டங்களே வெற்றிபெற தேவையாக இருந்தது.

எனினும், இறுதி ஓவரை சிறப்பாக வீசிய சூரியகுமார் யாதவ் ஐந்து ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இதனால் இலங்கை அணியின் வெற்றி தடுக்கப்பட்டதுடன் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரிலும் இலங்கை அணி சொதப்பியிருந்தது.

மூன்று பந்துகள் வீசப்பட்ட நிலையில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதுடன், இரண்டு ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதனால் சூப்பர் ஓவரில் மூன்று ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்திலேயே நான்கு ஓட்டங்களை அடித்து வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டது.

இதன்படி, மூன்றுக் போட்டிகள் கொண்ட T20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே 31 சர்வதேச T20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் 21 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை அணி ஒன்பது போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி எதிர்வரும் இரண்டாம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-(3)