இலங்கை அணியின் இரு வீரர்களை ஸ்ரெச்சரில் அனுப்பிய ஜெவ்தொம்சன்
இலங்கையின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுனில் வெற்றிமுனி வாழ்க்கையில் ஓரு விடயத்திற்கு மாத்திரமே அஞ்சினார். அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜெவ் தொம்சனை எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதே அந்த ஓரு விடயம்.
1975 ஆண்டு யூன் 11ம் திகதி உலககிண்ணப்போட்டியில் அவர் தொம்சனை எதிர்கொண்டார். முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து 328 ஓட்டங்களை பெற்றது. அலன் டேர்னர் 101ஓட்டங்களை பெற்றார்.
பதிலுக்கு இலங்கை அணி ஆடத்தொடங்கியதும் அவர்கள் டெனிஸ் லில்லி மற்றும் தொம்சன் ஜோடியை எதிர்கொள்ள நேர்ந்தது. நாங்கள் அதற்கு முன்னர் அவ்வாறானதொரு வேகத்தை எதிர்கொள்ளவில்லை, தொம்சன் பந்தை மறைத்தபடி பந்துவீசும் விதமும் ஆபத்தானதாக காணப்பட்டது என்கிறார் வெற்றிமுனி, அவர் தொம்சனின் ஆரம்ப ஓவர்களில் காலின் தொடைபகுதியிலும், இடுப்பு எலும்பு பகுதியிலும் பதம்பார்க்கப்பட்டார்.
எனினும் இதனையும் மீறி இலங்கை சிறப்பாக விளையாடியது. ஒரு ஓவரிற்கு ஆறு ஓட்டங்களுக்கு மேல் எடுத்தது, நிலைமை ஆபத்தாக மாறிகொண்டிருப்பபதை உணர்ந்த சப்பல் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த டுலிப்மென்டிசை கட்டுப்படுத்த மீண்டும் தொம்சனை அழைத்தார்.
அவர் முதல் இரண்டு பந்துகளையும் சிறப்பாக விளையாடினார்,இதன் பின்னர் அந்த ஆபத்தான பந்து வீசப்பட்டது. நாகப்பாம்பு போன்று உயர எழும்பி மென்டிசின் தலையை குறிவைத்தது. அவர் அந்த பந்திலிருந்து விலக முயன்றார். எனினும் அது அவரது நெற்றியை பதம் பார்த்தது, அவர் நிலைகுலைந்து தரையில் விழுந்தார்.
அச்சம் தரும் விதத்தில் தரையில் சில நிமிடங்கள் விழுந்து கிடந்த அவர் பின்னர் எழுந்தார். அவரது கண்களிலிருந்து நீர் வழிந்தது. நான் ஆடுகளத்தை விட்டு போகிறேன் என்றார். அவர் ஸ்டிரெச்சரில் கொண்டுசெல்லப்படுவதை காயங்களுடன் விளையாடிக்கொண்டிருந்த வெற்றிமுனி பார்த்துக்கொண்டிருந்தார்.
அதன் பின்னர் அணித்தலைவர் அனுரதென்னக்கோன் ஆடுகளத்திற்குள் நுழைந்தார். எனக்கு விக்கெட்டை நோக்கி செல்ல சிறிது நேரம் எடுத்தது. ஸ்ரெச்சரில் கொண்டுசெல்லப்பட்ட மென்டிசை அவதானித்தேன். ஏற்கனவே எங்கள் வீரர் ஓருவரை காயப்படுத்திய தொம்சனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என அவர் பின்னர் நினைவுகூர்ந்தார்.
மீண்டும் தொம்சனின் அடுத்த ஓவரில் வெற்றிமுனி தொம்சனை எதிர்கொண்டார். எனக்கு அந்த ஓவரில் என்ன நடைபெற்றது என்பது நினைவிருக்கின்றது, தொம்சனின் பந்து வெற்றிமுனியின் காலை பதம் பார்த்தது, வெற்றி முனியை ரன்அவுட் ஆக்குவதற்கான சந்தர்ப்பம் இருந்தும் அது தவறவிடப்பட்டது. பின்னர் வெற்றிமுனியை பார்த்து, தொம்சன் அடுத்த பந்து காலை உடைக்கும் என மிரட்டினார். அவர் தெரிவித்ததே நடந்தது. வெற்றிமுனியும் ஸ்ரெச்சரில் கொண்டுசெல்லப்பட்டார் என்றார் தென்னக்கோன்.