செய்திகள்

இலங்கை அரசியலில் கடவுள் யார் பக்கம்?

தாயகன்

இலங்கை அரசியலின் தலைவிதியையும்  அரசையும் தீர்மானிக்கும் சக்திகளாக கடந்த காலத்தில் பிரதான கட்சிகளும் பிரபல தலைவர்களும் இருந்த நிலையில் இன்று இலங்கையின் அரசியலை தேங்காய்கள் தீர்மானிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 தனது ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களையும் இனந்தெரியா ஆயுததாரிகளையும் இராணுவத் துணைக்குழுக்களையும் பயன்படுத்தி  தனது  இருப்பை உறுதிப்படுத்திக்கொண்ட மகிந்த ராஜபக்ஷவும் அவரது விசுவாசிகளும் இன்று மீண்டும் ஆட்சி பீடமேறுவதற்காக  தேங்காய்களையும் தமிழ்க் கடவுளர்களையும்  நம்ப வேண்டிய நிலையில் உள்ளனர்.

மகிந்த ராஜபக்ஷவினதும் அவரது ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி எனக் கூறிக்கொள்ளும் விசுவாசிகளினதும்  அரசியல் பயணத்தில் தற்போது தேங்காய்கள் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்தத் தேங்காய்ப் பயணத்தினால் மக்களுக்கோ, நாட்டுக்கோ பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படாதபோதும், மகிந்த ராஜபக்ஷ  அரசால் தமிழர்கள் பட்ட கொடுமைகளையும் துன்பங்களையும் அவல வாழ்வுகளையும் தற்போது தமிழ்க் கடவுள்களும்  அனுபவிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதுதான் விசித்திரமாக உள்ளது.

இதுவரை காலமும் தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடாத இந்த அரசியல்வாதிகள், தற்போது  தமிழ்க் கடவுள்களினது நிம்மதியையும் குலைக்கத் தொடங்கியுள்ளனர்.  நாட்டில் நல்லாட்சி என்ற பெயரில்  நடைபெறும் ஆட்சியைக்  கவிழ்ப்பதற்காகவும் தாம் மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற வேண்டும் என்பதற்காகவும் மகிந்தவும்  அவரது அணியினரும் தினமும்  தமிழ்க் கடவுள்களின்  குறிப்பாக பெண் கடவுள்களின்  ஆலயங்களுக்குப் படையெடுத்து,  ஆயிரக் கணக்கில் தேங்காய்களை உடைத்துத் தமது அரசியல் சூழ்ச்சியில் தமிழ்க் கடவுள்களையும் பங்கேற்குமாறு வேண்டுகின்றனர்.

குறிப்பாக, தமிழர்களின் உக்கிர கடவுளாகக் கருதப்படும்  காளியம்மனையே இந்த மகிந்த அணி இலக்கு வைத்துத்  தேங்காய்களை உடைத்துத்  தமது கட்சியின் பக்கம் கவர்ந்திழுக்கப்பார்க்கின்றனர். அடுத்ததாக சீனிகம தேவாலயமும் தேங்காய் உடைப்புகளால் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.  ஆனால் தேங்காய் வியாபாரிகளின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சிக் களை தோன்றியுள்ளது.  அதிலும் கடவுளுக்குத் தேங்காய் நேர்த்திக்கடன் செலுத்தும் இந்த அரசியல்வாதிகள்,  திருட்டுத் தேங்காய்கள் மூலமும் தமது நேர்த்திக்கடனைச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Untitled

தேங்காய் பொதுவாக புனிதமான பொருளாகக் கருதப்படுகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக இந்துக்களைப் பொறுத்தவரையில், தேங்காய்  நிறைகுடத்திற்கும் பூசைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன்  சமையலுக்கு இன்றியமையாததாக உள்ள தேங்காய்க்கு மருத்துவ குணமும் உள்ளதாகவே இதுவரை அறிந்து வந்தோம். ஆனால் இந்தத் தேங்காய்களுக்கு  சாபமிடும் சக்தியும்  அரசியல்  எதிராளிகளை அழிக்கும் சக்தியும் இருக்கின்றதென்பதை தற்போது தென்னிலங்கை அரசியல்வாதிகள்  காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமது அரசியல் நோக்கங்களுக்காக கடவுள்களுக்குத் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் அரசியல்வாதிகளில், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட அரசியல்வாதிகளும் முன்னின்று தேங்காய்களை உடைத்து சாமி கும்பிடுவதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் அரசியல்வாதிகள் சிலர் விசித்திரமான நேர்த்திகளையும் செய்கின்றனர். இதில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் முன்னிலையிலுள்ளார்.  தன்மீது  நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்திய ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்யாரட்னவுக்குக் கடவுளின் தண்டனை கிடைக்க வேண்டுமென நேர்த்தி வைத்து  காளியம்மன்ஆலயத்தில்  தொடர்ந்து ஏழு நாட்கள் தேங்காய் உடைக்கவுள்ளார்.

அதே நேரத்தில்  சில தினங்களுக்கு முன்னர் சீனிகம தேவாயலத்திற்குச் சென்று ஊவா முதலமைச்சர் அங்கு  மிளகாய் அரைத்து, தேங்காய் உடைத்து வித்தியாரட்னவுக்குத் தண்டனை வழங்குமாறு கடவுளைக் கேட்டுள்ளார். அதுமட்டுமன்றி வித்தியாரட்ன குற்றம் செய்திருந்தால் அவரை மட்டுமே தண்டிக்க வேண்டுமெனவும் அவரது குடும்பத்தைத் தண்டிக்கக்கூடாது எனவும்  அதேபோன்று தான் குற்றம் செய்திருந்தால் தன்னை மட்டும் தண்டிக்குமாறும் தனது குடும்பத்தை விட்டுவிட வேண்டுமெனவும் காளியம்மனுக்கு நிபந்தனை விதித்துள்ளார்.vc

வித்தியாரட்னவுக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் நீதிபதி  அவருக்குரிய தண்டனையை வழங்கக் காலதாமதம் ஆகும் என்பதாலயே அத்தண்டனையைக் கடவுளூடாக மிக விரைவாக  வழங்குவதற்குத் தான் முயற்சிப்பதாகவும் தனது கடவுள் நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவளை தமது கட்சி நல்லாட்சி அரசுக்கு எதிராக தேங்காய்களை உடைப்பதன் மூலம் தற்போது  நிலைமைகள் முன்னேற்றம் அடைந்து வருவதாக தலதா மாளிகைக்கு வழிபடச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை அவரது அணியினரும் ஆமோதித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மகிந்த அணியினரால்  முன்னெடுக்கப்படும் தேங்காய் உடைத்தல் நடவடிக்கை பலனளித்து வருவதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களிலும் தேங்காய்களை உடைக்கப்போவதாக  மகிந்த ஆதரவு அணி எம்.பி.யான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தமது தேங்காய் உடைப்பினால் அரசின் ஆயுட்காலம் குறைவடைந்து வருவதாலேயே சிங்கப்பூர் கடவுள்களுக்கும் தேங்காய் உடைக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வருவதற்கு,  முதலில் தைரியமாக மகிந்தவை  எதிர்த்து  வெளியே வந்தவர்கள் அப்போது அமைச்சர்களாக இருந்த ராஜித சேனாரத்ன, எம்.கே.டிஎஸ். குணவர்தன, துமிந்த திஸாநாயக்க போன்றவர்கள், அதேபோன்று வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரரும்  மைத்திரிக்கு ஆதரவாக பொது அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும்  ஒன்றிணைப்பதில் முன்னிலையில் இருந்தார். இதனால்தான்  மைத்திரி இலங்கையின் ஜனாதிபதியாக வர முடிந்தது.

 இந்த நிலையில் தற்போது  மகிந்த அணியின் தேங்காய் உடைப்பு ஆரம்பமாகியுள்ள சூழலில்,  மைத்திரி அரசிலும் அமைச்சராக இருந்த எம்.கே.டி.எஸ். குணவர்தன திடீர் சுகவீனமடைந்து  காலமானார்.  அதேபோன்று  வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரரும் சுகவீனமடைந்து சிங்கப்பூருக்கு சிகிச்சைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் காலமானார்.

அடுத்தவரான ராஜித சேனாரத்னவும் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் சிங்கப்பூர் வைத்தியசாலைக்குக்  கொண்டு செல்லப்பட்டார்.  இவ்வாறான சம்பவங்கள் தமது தேங்காய் உடைப்பு நேர்த்திக் கடனுக்குக் கிடைத்த சாதகமான பலன்கள் என  மகிந்த விசுவாசிகள் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர்.

ஆனால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக தேங்காய் உடைப்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். ஆனால்  இரத்தக்கறை படிந்தவர்களும்  ஊழல், மோசடிகள் புரிந்து மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டவர்களும்  திருடர்களும் கொலைகாரர்களும் தேங்காய் உடைத்தால்  அதன் பலன் கிடைக்காது. மாறாக கடவுளின் சாபத்தையே  பெற்றுக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.dinesh

அதேபோன்றே மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவும்  தற்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மகிந்த அணியினர் தென்னந்தோட்டங்களுக்குள் புகுந்து திருட்டுத்தனமாகத் தேங்காய்களைப் பிடுங்கி வந்தே  உடைக்கின்றனர்.  எனவே  திருட்டுத் தேங்காய் உடைத்துச் சாபமிடும் அவர்களை  அந்தக் கடவுளே பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.

இதேவேளை மகிந்த அணியினரின் இத்தேங்காய் உடைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துக் கூறுகையில்,  தற்போது நாட்டில் தேங்காயின் விலை குறைவடைந்துள்ளது.  எனவே எமது ஆட்சிக்கு எதிராக  தேங்காய் உடைப்பவர்கள்  ஒன்று இரண்டு ஆலயங்களுடன் நின்றுவிடாது  நாடுபூராகவும் உள்ள  அனைத்து ஆலயங்களிலும் கோவில்களிலும்  அனைத்துக் கடவுகள்களுக்கும் ஆகக் குறைந்தது 10 இலட்சம்  தேங்காய்களையாவது உடைக்க வேண்டும்.

அவ்வாறு உடைத்தால் நாடுபூராகவு>ம் தேங்காய்க்குத் தட்டுப்பாடு வரும். தேங்காயின் விலை உயரும். இதனால் தேங்காய் வியாபாரிகளும்  தென்னந்த்தோட்டங்கள் வைத்திருப்பவர்களும் நன்மையடைவார்கள். ஆனால் தயவு செய்து திருட்டுத் தேங்காய் உடைக்காதீர்கள்.  எவ்வளவோ திருடிய உங்களுக்குத் தேங்காய் திருடுவது பெரிய விடயம் அல்ல என்பது எமக்குத் தெரியும். ஆனால் திருட்டுத் தேங்காய் உடைத்தால் அதன் பலனை நீங்களே அனுபவிக்க வேண்டி வரும் எனக் கூறியுள்ளார்.

மகிந்த அணியினர் நல்லாட்சி அரசுக்கு எதிராக கடவுள்களின் உதவியை நாடியுள்ள நிலையில்,  மைத்திரி தரப்பில் உள்ள சிலரும் இவர்களுக்குப் போட்டியாக  பதில் தேங்காய் உடைப்பில் ஈடுபட்டுள்ளனர். மகிந்த அணியினர் கூண்டோடு சிறைக்குச் செல்ல வேண்டும். அவர்களின்  குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு  தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுதலாக உள்ளது.

தேங்காய் உடைப்பதன் மூலம் நினைப்பது நடக்கும் என்றால், தாம் கேட்பது கிடைக்கும் என்றால்  தமது சாபங்கள் நிறைவேறும் என்றால்  இலங்கையைக் கடந்த பல வருடங்களாக ஆட்சி புரிந்து வரும் எந்த அரசியல் தலைவர்களும் இன்று உயிரோடு இருந்திருக்க முடியாது.

ஏனெனில் இவர்கள் ஆட்சிபீடத்தில் இருந்த போது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகள், கொடுமைகள் அழிவுகள் சொல்லிலடங்காதவை. இவவாறான தலைவர்களுக்கு தமழ் மக்கள் போடாத சாபங்களையா, உடைக்காத தேங்காய்களையா, வைக்காத நேர்த்திகளையா இப்போதைய அரசியல்வாதிகள் செய்கின்றனர்? எனவே தேங்காய் உடைப்பிற்குப் பலன் இருக்குமானால் 2009 முள்ளிவாய்க்காலில் மகிந்த தரப்பினர் மேற்கொண்ட இனப்படுகொலைக்கு இன்று அவரின் ஆட்சியிலிருந்துதபெருமளவானோர் கடவுளின் தண்டனைக்கு உட்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் மக்களுக்கே உதவி செய்யாத, அவர்களின்  நேர்த்திக்கடன்களை நிறைவேற்றாத தமிழ்க் கடவுள்களை இன்று சிங்கள அரசியல்வாதிகளும் இனப்படுகொலையாளிகளும் நம்பி தேங்காய்களை உடைப்பது மட்டுமன்றி, அதன் பலன் தமக்குக் கிடைத்தும் வருவதாகக் கூறி வருவது தமிழ்க் கடவுள்களும் அரசியல்வாதிகளின் பக்கம் நிற்கின்றார்களோ என்றே  கேட்க வைக்கின்றது.

மகிந்த, மைத்திரி அணிகளின் நேர்த்திக் கடன்கள், அரசியல் சூழ்ச்சிகள், சாபங்கள் போன்றவற்றைக் கடவுள்கள் நிறைவேற்றுகின்றனரோ இல்லையோ,  தேங்காய் வியாபாரிகளுக்கு  மட்டும்  ஏதோ ஒரு வகையில் உதவி செய்கின்றார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியும்.

அமைதி, சமாதானம் வேண்டி தமது கடவுளான  புத்தரிடம் வெள்ளாடைகளுடன் ஓடும் இந்த அரசியல்வாதிகள்,  ஒரு ஆட்சியைக் கவிழ்க வேண்டும், ஒருவரைப் பழிவாங்க வேண்டும்,  ஒருவரின் உயிரைப் பறிக்க வேண்டும், தமது அரசியல்ஆசைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக   தமிழ்க் கடவுள்களை மட்டும் நாடி ஓடிவருவதுதான் ஆச்சரியமானது. இலங்கையின் தற்போதைய நிலைவரப்படி அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்க் கடவுள்கள் இருப்பதையிட்டு தமிழர்கள் ஆகிய நாம் ஓரளவுக்குப் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். அதுமட்டுமே  தற்போது  இந்த நல்லாட்சி அரசில் நாம் அடைந்துள்ள  நன்மை. அது தவிர வேறொன்றுமில்லை.

நன்றி:தினக்குரல்
n10